பஹாமஸ் விமான விபத்தில் 10 பேர் பலி

பஹாமஸ் விமான விபத்தில் 10 பேர் பலி

2 mins read
8796874c-9652-4117-92ff-de841b3ec9c9
பஹாமஸ் நாடு, அதன் 53வது சுதந்திர நாளைக் கொண்டாடிய வேளையில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. - கோப்புப் படம்: பிஸ்னஸ் இன்சைடர்

பஹாமஸ்: கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான பஹாமசில் நடந்த பயங்கர விமான விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஃபிலிப் டேவிஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீண்டும் ஒருமுறை நம் நாட்டின் வரலாற்றில் ஒரு துயரச் செய்தி எழுதப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“இன்று, நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாள். ஆனால் அது, துக்க நாளாக மாறிவிட்டது,” என்று அவர் வேதனையுடன் கூறினார்.

பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

லின்டன் பிண்ட்லிங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சான் ஆண்ட்ரோஸ் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்தில் ‘செஸ்னா 402’ ரக விமானம் பிற்பகல் ஒரு மணியளவில் விபத்துக்குள்ளானது.

விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில் அருகில் இருந்த புதர்களுக்குள் அது விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் ஒன்பது பயணிகள், ஒரு விமானி உட்பட மொத்தம் 10 பேர் இருந்ததாகக் காவல்துறை ஆணையர் ஷாந்தா நோல்ஸ் தெரிவித்தார். இந்த விபத்தில் முன்னதாக ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான விமானம், பஹாமசைத் தளமாகக் கொண்ட ‘ஃபிளமிங்கோ ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமானது. விபத்தையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமான நிறுவனத்தின் உரிமத்தைப் போக்குவரத்து அமைச்சு உடனடியாக ரத்து செய்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இது குறித்து ‘ஃபிளமிங்கோ ஏர்’ நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் எதையும் வெளியிடவில்லை.

ஆனால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்