சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் படையெடுத்த 10 மில்லியன் பயணிகள்

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் படையெடுத்த 10 மில்லியன் பயணிகள்

2 mins read
20be1f30-2877-45ff-b108-febbf939b362
இவ்வாண்டின் முற்பாதியில் சிங்கப்பூரிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமானோர் மலேசியாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சிங்கப்பூர், இந்தோனீசியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆக அதிக எண்ணிக்கையில் சுற்றுப்பயணிகள் சென்றுள்ளதாக மலேசியச் சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் டியொங் கிங் சிங் கூறியுள்ளார்.

இவ்வாண்டின் முற்பாதியில் சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்ற சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 10,288,256ஆகப் பதிவானது. கடந்த ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க அது 22.5 விழுக்காடு அதிகம்.

இந்தோனீசியாவிலிருந்து மலேசியா சென்ற சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையும் 8.2 விழுக்காடு கூடியது. கடந்த ஆண்டு 2,031,111 பேர் இந்தோனீசியாவிலிருந்து மலேசியா சென்றனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,197,288க்கு உயர்ந்தது.

மலேசியாவுக்கு ஆக அதிகமாகச் சென்ற சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் சீனா புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 35.6 விழுக்காடு அதிகரித்தது.

கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூன் வரை 1,607,413 பேர் சீனாவிலிருந்து மலேசியாவுக்குப் பயணம் செய்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,178,857ஆக உயர்ந்தது.

“அதிக சுற்றுப்பயணிகள் கொண்ட சந்தைகளில் மின்னிலக்க வழிகள் மூலமும் சமூக ஊடகத் தளங்கள் மூலமும் கூடுதல் விளம்பர நடவடிக்கைகளைப் பதிவேற்றுவதில் கவனம் செலுத்தப்படும்,” என்றார் அமைச்சர் டியொங்.

முஸ்லிம்களுக்கு உகந்த சுற்றுலா அம்சங்களுக்கான தேவையையும் சுட்டிய அவர், அதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

முஸ்லிம்களுக்கு உகந்த சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளை மேம்படுத்தவும் முன்னிறுத்தவும் இஸ்லாமியச் சுற்றுலா நிலையம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திரு டியோங் சொன்னார்.

இல்லங்களில் தங்கும் அனுபவங்களைத் தரும் திட்டங்கள் மூலம் சமூக அடிப்படையிலான சுற்றுலாவையும் உருவாக்க அமைச்சு உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“உள்ளூர்ப் பொருளியலை மெருகேற்றவும் சுற்றுப்பயணிகளுக்குத் தங்கள் கலாசாரத்தையும் மரபுடைமையையும் அறிமுகப்படுத்தவும் உள்ளூர்வாசிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படலாம்,” என்ற திரு டியோங், அத்தகைய சமூகங்களை அடையாளம் காண்பதில் மாநில அரசாங்கங்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்