காத்மாண்டு: நேப்பாளத்தின் ஹிம்லூங் சிகரத்தின் அடிவார முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, 10 உள்ளூர் மலையேறிகளையும் வழிகாட்டிகளையும் காணவில்லை. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாலை அதுகுறித்துப் பயண ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நாட்டின் மத்திய பகுதியில் உள்ளது அந்தச் சிகரம்.
சென்ற மாதம் 26ஆம் தேதி 1,400க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கி, 6,000க்கும் மேற்பட்டோரைக் காணாமற்போகச் செய்த பெருவெள்ளத்திலிருந்து இந்த நாடு இன்னும் மீளவில்லை.
திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள ஹிம்லூங் சிகரத்தில், பனிச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு பல நாள்கள் கனமழை பெய்தது.
தேடுதல், மீட்புக் குழுவொன்றும் இரண்டு ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் இருக்கின்றன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவற்றால் செல்ல முடியவில்லை என்று இமாலயா ஹோலிடேஸ் டிரெக்கிங் நிறுவனத்தின் பிபூதி சந்த் தாக்கூர், ஏஎஃப்பி ஊடகத்திடம் தெரிவித்தார்.
“எங்கள் பயணக் குழுவைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களும் மற்றொரு நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் காணாமற்போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். காணாமற்போன அனைவரும் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களில் எட்டு நேப்பாளத்தில் உள்ளன. மேலும் அதன் மலைகளுக்குத் திரளும் வெளிநாட்டு மலையேறிகள், பெரும்பான்மையாகக் கிராமங்களைக் கொண்ட இந்த நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளனர்.
நேப்பாளம் இலையுதிர்கால மலையேற்றத்திற்காக 500க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் உலகின் மிக உயர்ந்த எட்டாவது மலையான மனாஸ்லு பெரும்பாலான பங்கைக் கொண்டுள்ளது.
இந்த வாரம் மனாஸ்லுவில் பெய்த கனமழை காரணமாக மலையேறிகள் பயணங்களை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. தௌலகிரி மலைத்தொடருக்கான பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
நேப்பாளத்தின் சில பகுதிகளில் செப்டம்பர் 24 முதல் கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
