புதுடெல்லி: மேற்கு வங்கக் காவல்துறையினர் 100 வெடிகுண்டுகளை அம்மாநிலத்தை ஆட்சி செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருந்தவர் என சந்தேகிக்கப்படும் ஆடவரின் இல்லத்தில் கைப்பற்றினர்.
இதன் விவரங்களை என்டிடிவி ஊடகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டது. உளவுத் துறை வழங்கிய தகவலின்படி, காவல்துறையினர் பங்கார் பகுதியில், ரஃபிகுல் இஸ்லாம் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையே குண்டு தயாரிப்பு உட்பட மேற்கு வங்கத்தில் கண்டுபிடிக்கப்படும் அனைத்துவித வெடிபொருள்கள் சார்ந்த சம்பவங்களை தேசியப் புலனாய்வு முகவை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு முன் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம், மாநிலக் காவல்துறையை சிறப்புப் படைகளை அமைத்து, வெடிகுண்டுகளைத் தயாரித்தோரை கண்டறிந்து கைது செய்யும்படி அறிவுரை வழங்கியது. காவல்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை தொடர்வதாகக் கூறினர்.
மக்கள் வாக்களிக்கும்போது எந்த வட்டாரத்திலும் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிமீது ஆணையம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் என்று அனைத்து காவல்துறை உயர்அதிகாரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கண்காணிப்பு செயல்பாடுகள் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.

