மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரம் இணைய ஊடுருவல்: அன்வார்

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரம் இணைய ஊடுருவல்: அன்வார்

படம்: ஏஎஃப்பி

15 Nov 2026 - 2:36 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்வதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இன்னும் துடிப்புமிக்க நிலையிலான ஆயத்த நிலையில் பாதுகாப்புப் படைகள் இருக்கவேண்டும் என்றார் அவர்.

நாட்டின் தற்காப்புப் பிரிவு வழக்கமான ராணுவ அச்சுறுத்தல்களில் மட்டும் கவனம் செலுத்த முடியாது என்ற திரு அன்வார், இணையத் தாக்குதல்கள், கட்டமைப்பு ஊடுருவல்கள், தீவிரவாத நடமாட்டங்கள் இன்றைய சிக்கல் நிறைந்த சவால்களாக மாறியுள்ளன என்று விவரித்தார்.

மாதந்தோறும் ஆயிரக்கணக்கான தாக்குதல் முயற்சிகளை எதிர்கொள்வதால், தற்காப்பை வலுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்திய அவர், இணையப் பாதுகாப்பை வலுவாக்க தற்காப்புப் படைகளின் உயர்மட்ட தலைமைத்துவத்தை நேரில் சந்தித்ததைப் பகிர்ந்துகொண்டார்.

தேசியச் சேவைப் பயிற்சித் திட்டத்தின் தேசிய இளம் வீரர்களுடன் நடைபெற்ற ’தெமு அன்வார்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்குத் திரு அன்வார் பதில் அளித்தார்.

அச்சுறுத்தலின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்ட அமெரிக்காவின் விமான நிலைய கட்டமைப்பில் ஏற்பட்ட அண்மை சேவைத் தடங்கலை அவர் சுட்டினார்.

“நவீனமான வசதிகளைக் கொண்ட அமெரிக்காவாலும் தடங்கலுக்கான காரணத்தை அடையாளம் காண முடியவில்லை. அதன் தொலைதொடர்புக் கட்டமைப்புகள் தாக்கப்பட்டதில் அது செயலிழந்துபோனது. இன்றுவரை சம்பவம் குறித்த இறுதி அறிக்கைக்குக் காத்திருக்கிறார்கள்,” என்று திரு அன்வார் கூறினார்.

இதற்கிடையே, ஆளில்லா வானூர்தி போன்ற நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தேசியத் தற்கப்பு, ஆயுதக் கொள்முதல் ஆகியவற்றை மாற்றியமைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்காப்பின் இரு பரிமாணங்களையும் வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்து, நிதியமைச்சராகவும் இருக்கும் திரு அன்வார், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு இணையாக, தற்காப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அரசாங்கம் உயர்த்தியுள்ளதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்