ஜோகூர் பாரு: ‘விஇபி’ எனப்படும் வாகன நுழைவு அனுமதி முறை அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வருவதற்குமுன், மொத்தம் 100,000 சிங்கப்பூர் கார்கள் அதற்குப் பதிவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
இரண்டு நில வழி நுழைவுப்பாதைகளையும் பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குள் நுழையும் கார்களின் எண்ணிக்கை கருத்தில்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“மே 28ஆம் தேதி, வாகன நுழைவு அனுமதி முறை கட்டாயமாக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார்களின் உரிமையாளர்களிடமிருந்து 58,791 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இணையம் வழியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களும் இவற்றில் அடங்கும்,” என்றார் அவர்.
“19,460 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்கான நடைமுறை நிறைவுபெற்றுள்ளது. மேலும் 11,435 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. எஞ்சிய 40 விழுக்காட்டு விண்ணப்பங்கள் முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டன,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கூறினார்.
டங்கா பேயில் உள்ள ‘விஇபி’ அனுமதி வழங்கும் நிலையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வாகன நுழைவு அனுமதி முறை அமலுக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள வேளையில் மேலும் 50,000 புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டு முதலே இந்த நடைமுறை பயன்பாட்டில் இருந்தாலும் அது முழுமையாக நடப்புக்கு வரவில்லை என்பதையும் அக்டோபர் 1ஆம் தேதி அது கட்டாயமாக்கப்படுவதையும் அமைச்சர் சுட்டினார்.
“அன்றாடம் 18,000 சிங்கப்பூர் கார்கள் மலேசியா வந்து திரும்புவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் கிட்டத்தட்ட 10 முதல் 15 விழுக்காட்டு வாகனங்களே வாகன நுழைவு அனுமதிக்குப் பதிந்துகொண்டுள்ளன,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய- சிங்கப்பூர் எல்லையில் கொண்டுவரப்படும் இந்த அமலாக்கம், சிங்கப்பூரர்கள் தனியார் வாகனங்களில் மலேசியாவிற்குள் வரக்கூடாது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்படவில்லை என்று கூறிய அமைச்சர் லோக், அவர்கள் மலேசியச் சட்டத்தை மதித்து நடப்பதை உறுதிசெய்வதே நோக்கம் என்றார்.
“அவர்களை அச்சுறுத்த விரும்பவில்லை. இங்கே வந்து, பொருள்கள் வாங்க அவர்களை ஊக்குவிக்கிறோம்,” என்றார் அவர்.
வாகன நுழைவு அனுமதி பெறாத, வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட கார்களை ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரிங்கிட் வரையிலான அபராதமோ ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.