காலாவதியான உரிமத்துடன் காரோட்டிய 103 வயது மூதாட்டி

காலாவதியான உரிமத்துடன் காரோட்டிய 103 வயது மூதாட்டி

படம்: அன்ஸ்பிளாஷ்

17 Mar 2024 - 5:25 pm

1 mins read

ரோம்: தன்னுடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டபோதும் இரவு நேரத்தில் நண்பர்களைக் காண்பதற்காக காரோட்டிச் சென்ற 103 வயது மூதாட்டியை இத்தாலி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

அவர் ஓட்டிச் சென்ற காருக்கும் காப்புறுதி எடுக்கப்பட்டிருக்கவில்லை.

போண்டெனோ நகரின் மையப்பகுதியில் ஒருவர் ஆபத்தான முறையில் காரோட்டிச் செல்வதாக சனிக்கிழமை (மார்ச் 16) பின்னிரவு 1 மணியளவில் (சிங்கப்பூரில் ஞாயிறு காலை 8 மணி) காவல்துறைக்குத் தகவல் சென்றது.

இதனையடுத்து, சுற்றுக்காவல் காரில் அங்கு விரைந்த காவல்துறையினர், அவ்வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவரைக் கண்டதும் பெரிதும் வியப்படைந்தனர்.

அந்தக் காரை ஓட்டிச் சென்றவர் திருவாட்டி ஜியுசெப்பினா மொலினாரி. அவர் 1920ஆம் ஆண்டு பிறந்தவர்.

“103 வயதிலும் காரோட்டும் அளவிற்கு அவருக்கு உடல் வலிமை இருப்பது வியப்பளிக்கிறது,” என்று காவல்துறை தெரிவித்தது.

ஈராண்டுகளுக்கு முன்னரே திருவாட்டி மொலினாரியின் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டது. இத்தாலியில் 80 வயதைத் தாண்டியவர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமெனில், ஈராண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டியது கட்டாயம்.

திருவாட்டி மொலினாரிக்கு அபராதம் விதித்த காவல்துறை, அதன்பின் அவரை அவரது வீட்டிற்கே கூட்டிச் சென்றது.

ஆயினும், வீட்டிலேயே அடைந்து கிடப்பதில் திருவாட்டி மொலினாரிக்கு விருப்பமில்லை. “எனக்கு ஒரு வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கிக்கொள்வேன்,” என்று உள்ளூர் நாளிதழிடம் அவர் கூறினார்.

இடைப்பட்ட காலத்தில் மிதிவண்டியில் சென்று தம் நண்பர்களைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்