பிரான்ஸ் விடுமுறை விடுதியில் தீ; 11பேர் பலி

2 mins read
cbd8b9d1-7ab2-4c28-b6fb-0b72b1473ccb
பிரான்சின் கிழக்குப் பகுதியான விண்ட்சென்ஹெய்மில் உள்ள விடுமுறை விடுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 11பேர் உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி

பாரீஸ்: பிரான்சின் கிழக்குப் பகுதியான விண்ட்சென்ஹெய்மில் உள்ள விடுமுறை விடுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 11பேர் உயிரிழந்தனர்.

அந்த விடுதியில் உடல் குறையுள்ள வயதானவர்கள் குழு தங்கியிருந்த அறையில் மூண்ட தீயால் இந்த விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் கூறினர்.

மரத்தாலான அந்த விடுமுறை விடுதியில் இரவு நேரம் விருந்தினர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், மேல்தளத்தில் தங்கியிருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விரைவாகச் செயல்பட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தீயினால் எரிந்து சேதமடைந்த அந்த விடுதி இரண்டு தளங்கள் கொண்ட பழைய கட்டடம் எனவும் சில ஆண்டுகளுக்கு முன்பு அது புதுப்பிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல்தளத்தில் இருந்த அனைவரும் உயிருடன் உள்ளனர். மேற்தளத்தில் தங்கியிருந்த 5 பேர் உயிருடனும் 11 பேர் இறந்த நிலையிலும் மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆறு உடல்களில் இருவரின் உடல்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மற்ற உடல்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

“அந்த விடுதியின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து உள்ளதாலும், தரையின் உறுதிப்பாடு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாலும் பாதிக்கப்பட்ட தளத்தை அணுகுவது மிகவும் சிரமமாக உள்ளது,” என அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தச் தீச்சம்பவம் குறித்து மத்திய ஐரோப்பிய நேரப்படிக் காலை 6.30 மணிக்கு தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த போதிலும் அது விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் உள்ளூர் தீயணைப்புப் படை அதிகாரிகள் ஏஎஃப்பியிடம் தெரிவித்தனர்.

மேலும்,17 பேர் அந்த இடத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்