பெய்ஜிங்: சீனாவில் சிசியார் நகரத்தில் பள்ளி ஒன்றின் சீருடற்பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் மாண்டனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்தது.
இந்த விபத்து நடந்தபோது இளம்பெண்கள் குழு ஒன்று வலைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்த மேற்கூரையின் மீது அளவுக்கு அதிகமாகப் பொருள்களை அடுக்கி வைத்ததால், பாரம் தாங்காமல் அது இடிந்து விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15 பேரை மீட்டனர் எனவும் எஞ்சியிருந்த ஒருவரை உள்ளூர் நேரப்படி ஜூலை 24ஆம் தேதி காலை 10 மணிக்கு மீட்டனர் எனவும் அரசு ஊடகம் தெரிவித்தது. அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
“அந்தக் குழுவில் பல்வேறு வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இருந்தனர். சில நாள்களுக்கு முன்பு அவர்கள் வேறு நகருக்குச் சென்று போட்டி ஒன்றில் பங்கேற்று இப்போது தான் பள்ளிக்குத் திரும்பினர் எனச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அரசு வானொலிக்குத் தெரிவித்தார்.
மேலும், அந்தச் சீருடற்பயிற்சிக் கூடத்தில் 19 பேர் இருந்தனர் என்றும் அதில் நான்கு பேர் இடிபாடுகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீருடற்பயிற்சிக் கூடத்தின் மேற்கூரையில் அந்தப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடத்தைக் கட்டி வரும் கட்டுமான நிறுவனத்தின் கட்டுமானத் தொழிலாளர்கள் தண்ணீரை உறிஞ்சும் தன்மைகொண்ட ‘பெர்லைட்’ என்னும் கனிமத்தை சட்டவிரோதமாக வைத்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
தொடர்மழைக் காரணமாக அந்தக் கனிமம் தண்ணீரில் நனைந்து எடை அதிகரித்தக் காரணத்தால் கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என அரசு ஊடகம் தெரிவித்தது.
இந்த விபத்துக் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அந்தப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடத்தைக் கட்டி வரும் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

