பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் பெய்த கடும் மழையால் பாலம் ஒன்று சரிந்துவிழுந்தது.
அந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று உள்ளூர் ஊடகம் ஜூலை 20ஆம் தேதி தெரிவித்துள்ளது.
ஷான்சி மாநிலத்தின் ஷாங்லு பகுதியில் ஆற்றுக்கு மேல் அமைந்திருந்த அந்தப் பாலம் ஜூலை 19ஆம் தேதி இரவு 8.40 மணிவாக்கில் திடீர் மழையாலும் வெள்ளத்தாலும் சரிந்துவிழுந்ததாக மாநிலப் பொதுத் தொடர்புத் துறையை மேற்கோள்காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
அந்தப் பாலம் அடியில் இருந்த ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 20 வாகனங்களையும், 30க்கும் மேற்பட்டோரையும் காணவில்லை என்று அரசாங்கத் தொலைக்காட்சியான ‘சிசிடிவி’ தெரிவித்தது.
இதுவரை மீட்கப்பட்ட ஐந்து வாகனங்களினுள் உயிரிழந்த 12 பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாக அது கூறியது.
பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியிருந்ததை அரசாங்கத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட படங்கள் காட்டின.
இதற்கிடையே, காணாமல்போனவர்களைத் தேட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 16ஆம் தேதியிலிருந்து பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சீனாவின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் பெரும்பாலானவை பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சென்ற மே மாதத்தில் சீனாவின் தென்பகுதியில் பல நாள்களாகப் பெய்த மழை காரணமாக நெடுஞ்சாலை ஒன்று இடிந்துவிழுந்தது. அதில் 48 பேர் மாண்டனர்.
முன்னதாக ஜுலையில், சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரம் ஒன்றைச் சூறாவளி கடந்தபோது, ஒருவர் உயிரிழந்தார்; 79 பேர் காயமடைந்தனர். குறிப்பிடத்தக்க அளவில் அழிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

