மியன்மார் மோசடி நிலையத்துடன் தொடர்புடைய 11 பேருக்குச் சீனாவில் மரண தண்டனை

மியன்மார் மோசடி நிலையத்துடன் தொடர்புடைய 11 பேருக்குச் சீனாவில் மரண தண்டனை

1 mins read
a9a597fe-b3db-4ec9-9281-b4edd1738d29
மியன்மாரின் மியாவாடி நகரில் உள்ள மோசடி நிலைய வளாகம். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: மியன்மார் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 11 பேருக்குச் சீனா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. தொலைத்தொடர்பு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கிய உறுப்பினர்களும் அவர்களில் அடங்குவர் என்று சீன அரசாங்க ஊடகமான சின்ஹுவா, வியாழக்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.

இணையத்தில் காதல் மோசடி, மின்னிலக்க நாணய முதலீட்டு மோசடி போன்றவற்றுக்கு வலை விரிக்கும் மோசடிக் கும்பல்கள் செயல்படும் வளாகங்கள் தென்கிழக்காசியாவில் அதிகரித்து வருகின்றன. மியன்மார் எல்லைப் பகுதிகளிலும் இத்தகைய வளாகங்கள் அமைந்துள்ளன.

தொடக்கத்தில் சீன மொழி பேசுவோரைக் குறிவைத்துச் செயல்பட்ட இத்தகைய குற்றக் கும்பல்கள், பின்னர் பல்வேறு மொழிகளைப் பேசுவோரிடமும் கைவரிசை காட்டி, உலகெங்கும் பாதிக்கப்பட்டோரின் பணத்தைச் சுருட்டுகின்றன.

இந்த மோசடிச் செயல்களில் ஈடுபடுவோர் சிலநேரங்களில் விரும்பியே இதில் ஈடுபட்டாலும் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டுக் கட்டாயப்படுத்தப்படுவோரும் உண்டு.

இத்தகைய மோசடி நிலையங்களை ஒடுக்க, அண்மைய ஆண்டுகளில் சீனா, வட்டார நாடுகளின் அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பை அதிகரித்தது. பல்லாயிரக்கணக்கானோர் தாயகமான சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு விசாரிக்கப்பட்டனர்.

வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 11 பேருக்கும் வென்சோ நகர நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டதாக சின்ஹுவா கூறியது.

அனைத்துலக அளவில் கொலை, காயம் விளைவித்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல், மோசடி, சூதாட்டக் கூடம் நிறுவியது போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக அது தெரிவித்தது.

மியன்மார் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோசடி நிலையங்கள் உலகெங்கும் பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்