தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிலாங்கூர் எரிவாயுக் குழாய் வெடிப்பில் சேதமுற்ற வீடுகளைப் பழுதுபார்க்க $12.1 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
9b106f73-5c27-42b8-9d53-13e4fdcb7edc
எரிவாயுக் குழாய் வெடிப்புக்குப் பிறகு ஏப்ரல் 1ல் தாமான் புத்ரா ஹைட்சில் உள்ள நிலவரம். - படம்: பெர்னாமா

சுபாங், சிலாங்கூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி எரிவாயுக் குழாய் வெடித்த சம்பவத்தில் சேதமுற்ற பல வீடுகளைப் பழுதுபார்த்து மீண்டும் கட்டுவதற்கு அரசாங்கம் 40 மில்லியன் ரிங்கிட்டை (S$12.1 மி.) ஒதுக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் 40 விழுக்காட்டுக்குமேல் சேதமுற்று, மீண்டும் கட்டப்பட வேண்டிய நிலையில் உள்ள வீடுகளுக்குக் கட்டுமானச் செலவுகளுக்காக தலா 300,000 ரிங்கிட் வரை கிடைக்கும். மறுகட்டுமானம் தேவைப்படாத வீடுகளுக்கு 150,000 ரிங்கிட் வரை வழங்கப்படும்.

இச்சம்பவத்தில் 40 விழுக்காட்டுக்கும் குறைவாகச் சேதமுற்ற வீடுகளுக்கு தலா 30,000 ரிங்கிட் வரை கிடைக்கும்.

இந்நிலையில், தாமான் புத்ரா ஹார்மனி குடியிருப்புப் பேட்டையில் மறுகட்டுமானப் பணிகள் இந்த வாரம் தொடங்கவுள்ளன. வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள வீடுகளுடன் இப்பணிகள் தொடங்கும்.

மறுசீரமைப்புக்கான தொகையில் 40 மில்லியன் ரிங்கிட், தேசிய பேரிடர் நிவாரண வீடமைப்பு நிதியிலிருந்து பெறப்படும் என்று வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சர் கா கோர் மிங் புதன்கிழமை (ஏப்ரல் 30) தெரிவித்தார்.

சாலை, உள்கட்டமைப்புப் பழுதுபார்ப்புகளுக்காக அரசாங்கம் கூடுதலாக 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.

இந்த வெடிப்பில் சேதமுற்ற 219 வீடுகளில், 81 வீடுகள் முற்றிலுமாகச் சேதமுற்றதாகவும் 138 வீடுகள் ஓரளவு சேதமுற்றதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசேன் உமர் கான் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை மத்திய அரசோ அல்லது சிலாங்கூர் மாநில அரசோ இதுவரை அடையாளம் காணவில்லை. ஆனால் வெடிப்புக்கு முந்தைய நாள் அந்தப் பகுதியில் ஒரு அகழ்வாராய்ச்சியாளர் தோண்டிக் கொண்டிருந்தது காணப்பட்டதாக மக்கள் சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதைக்கப்பட்ட எரிவாயு குழாயின் பாதை வேலி அமைத்து தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.

வெடிப்பு குறித்த அறிக்கை ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஏப்ரல் 30ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் சிலாங்கூர் முதல் அமைச்சர் அமிருதீன் ஷாரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்