கொழும்பு: இலங்கையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து, அந்த இல்லத்தின் மேலாளர், வியாழக்கிழமை (ஜூன் 4) கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் அறுவர் காயமுற்றனர்.
கொழும்பிலிருந்து ஏறக்குறைய 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அங்குருவாதோட்டப் பகுதியில் அமைந்துள்ள ‘மௌபிய செவன’ முதியோர் இல்லத்தில் புதன்கிழமை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
கருகிய உடல்கள் மீட்பு
விபத்து நடந்த இடத்தில் வியாழக்கிழமை, தடயவியல் வல்லுநர்கள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளுக்கு இடையே கருகிய நிலையில் மேலும் ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.
தப்பிப் பிழைத்தவர்கள், அண்டை வீட்டாரிடம் விசாரணை தொடரும் வேளையில், கைவிலங்கிடப்பட்ட இல்ல மேலாளரைக் காவல்துறையினர் விசாரணைக்காக விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து வந்ததாக ஏஎஃப்பி புகைப்படக் கலைஞர் கூறினார்.
மாண்டோரில் ஆக இளையவர் 17 வயதுச் சிறுவன்
தீக்கிரையான இல்லத்தில் முதியவர்கள் மட்டுமன்றி, மனநலம் பாதிக்கப்பட்ட இளையர்களும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தோரில் ஆக இளையவர் 17 வயதுச் சிறுவன் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இல்லவாசிகள், ஊழியர்கள் உட்பட 51 பேர், அருகில் உள்ள அரசுக் கட்டடத்திற்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ராணுவத்தினரும் அரசு அதிகாரிகளும் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகக் காவல்துறைச் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட்ரிக் வூட்லர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

