புக்கிட் காயு ஹித்தாம்: மலேசியாலுள்ள 12 பெட்ரோல் நிலையங்கள் எரிபொருள் கடத்தல் அதிகம் நிகழக்கூடியவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த நிலையங்களில் ஏறத்தாழ 300 சுற்றுக்காவல் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெட்ரோல் கடத்தலை முறியடிப்பதற்கான அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடத்தல் வாய்ப்புள்ள அந்த 12 பெட்ரோல் நிலையங்களில் ஏழு நிலையங்கள் மலேசியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் தாய்லாந்தின் பாலிங் மாவட்டத்திலும் நான்கு நிலையங்கள் குபாங் பாசு மாவட்டத்திலும் உள்ளன. எஞ்சிய ஒன்று பாடாங் தெராப் மாவட்டத்தில் அமைந்துள்ளதாக கெடா மாநில காவல்துறைத் தலைவர் அட்ஸ்லி அபு ஷா கூறினார்.
சலுகை விலை பெட்ரோலும், விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களும் கடத்தப்படுவதைத் தடுக்க பல்வேறு அதிகாரிகளைக் கொண்ட குழு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தாய்லாந்து செல்லும் உள்ளூர்வாசிகள் தங்களது வாகனங்களில் அதிக எரிபொருளை நிரப்புவதாக எல்லையிலுள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் தங்களது வாகனங்களில் நிரப்பும் எரிபொருளின் அளவு இதற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று அந்த பெட்ரோல் நிலையங்களை நடத்துவோர் கூறியதாத ‘த ஸ்டார்’ இணையச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

