வாஷிங்டன்: விவேக கைப்பேசி, கணினிகள், மற்ற தொழில்நுட்பப் பொருள்கள் ஆகியவற்றுக்கு 125% வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.
இவை பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள். தற்போதைய புதிய அறிவிப்பால் இவை மீது 125% வரி விதிக்கப்படாது.
இது குறித்து இறக்குமதியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல் அறிக்கையின்படி, வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களின் பட்டியல் அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு ஏப்ரல் 5ஆம் தேதி என பின்தேதியிடப்பட்டு சிங்கப்பூர் நேரப்படி அன்று மதியம் 12.01 மணிக்கு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் 20 வகையான பொருள்கள் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அனைத்து விதமான கணினிகள், மடிக்கணினிகள், போன்றவை இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், அதில் பகுதி மின்கடத்தி, கணினிச் சில்லுகள், தட்டையான விளம்பரத் திரைகள் போன்றவையும் அடக்கம் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகம் தற்பொழுது எடுத்துள்ள முடிவுக்கு காரணம் எதுவும் அந்தத் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த அறிவிப்பால், ஆப்பிள், டெல் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்ற இறக்குமதியாளர்கள் எனப் பலரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலக்கு திரு டிரம்ப் பதில் நடவடிக்கையாக சீனப் பொருள்கள் மீதான வரியை 125 விழுக்காட்டுக்கு உயர்த்திய பொருள்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார்.
அதற்கு முன் ஃபெட்டனில் போதைப் பொருளைக் காரணம் காட்டி திரு டிரம்ப் அனைத்து சீனப் பொருள்கள் மீதும் விதித்த 20 விழுக்காடு வரி நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், திரு டிரம்ப் பகுதி மின்கடத்திகள், கணினிச் சில்லுகள், விவேக கைப்பேசிகள், மடிக்கணினிகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பப் பொருள்களுக்கு சீனத் தயாரிப்புகளை அமெரிக்கா நம்பியிருக்கலாகாது என்பதைத் திரு டிரம்ப் ஏற்கெனவே அமெரிக்கர்களுக்கு தெளிவுபடக் கூறிவிட்டதாக அதிபரின் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் திருவாட்டி கேரோலைன் லியெவிட் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஆப்பிள், நிவிடியா, தைவான் பகுதி மின்கடத்தி உட்பட முக்கிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அமெரிக்காவுக்குள் கூடிய சீக்கிரமே கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருவதாகவும் திருவாட்டி கேரோலைன் லியெவிட் கூறினார்.