பெய்ஜிங்: சீனாவின் ஹெனான் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கனரக வாகனத்தின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதை அடுத்து 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் போக்குவரத்து நிர்வாகப் பிரிவு சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவலின்படி, அதிகபட்சமாக ஒன்பது பயணிகள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய வேனில் 16 பேர் ஏற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சீன நேரப்படி வியாழக்கிழமை (மே 28) அதிகாலை 2.40 மணியளவில் நன்யாங் நகரின் ஜி40 விரைவுச்சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, அதற்கு முன்னால் இருந்த கனரக வாகனத்தின் பின்புறத்தில் எதிர்பாராமல் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து நேரடி விசாரணை நடத்தவும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் போக்குவரத்துத் துறை அதிகாரியின் தலைமையிலான சிறப்புக் குழு ஒன்று உடனடியாக நன்யாங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் தென்மேற்கு நகரான குன்மிங்கில் ரயில்வே ஊழியர்கள் குழு ஒன்றின் மீது ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

