பாகிஸ்தானில் 130 மலேசியர்கள் இணையக் குற்றங்களால் தடுத்துவைப்பு

பாகிஸ்தானில் 130 மலேசியர்கள் இணையக் குற்றங்களால் தடுத்துவைப்பு

படம்: பெர்னாமா

31 Oct 2026 - 5:09 pm

2 mins read

கோலாலம்பூர்: இணையக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தில் பாகிஸ்தானின் ராவல்பிந்தி மாநிலத்தில் 130 மலேசியர்கள் அண்மையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை மலேசியக் காவல்துறை உறுதிசெய்தது.

அதன் விவரங்களை அரச மலேசிய காவல்துறைத் தலைவர் முகம்மது கலிட் இஸ்மாயில் தெரிவித்ததாக அந்நாட்டு மலாய் மெயில் ஊடகம் சனிக்கிழமை (அக்டோபர் 31) செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் தடுத்துவைக்கப்பட்டதற்கான காரணங்களை முழுமையாக அறிய, மலேசிய வெளியுறவு அமைச்சின் உதவியோடு பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் காவல்துறை அணுக்கமாக செயல்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் சார்ந்த மேல் நடவடிக்கைகள் புக்கிட் அம்மான் வர்த்தகக் குற்றப் பிரிவின் விசாரணைத் துறைக்கு (சிசிஐடி) மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணையைக் கண்காணிக்க, மலேசிய காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.

தடுத்துவைக்கப்பட்ட மலேசியர்கள் சிலருக்கு விசா உள்ளன, சிலருக்கு விசா காலாவதியாகிவிட்டது.

“எனவே பாகிஸ்தானின் அரசாங்கம் அதனால் முடிந்த அளவு, அங்கு விசாரணைகள் முறையாக நடப்பதை உறுதிசெய்வதற்கு எங்களுக்கு உதவும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. அங்குள்ள அதிகாரிகளுடன் மலேசிய சிசிஐடி துறை தொடர்பில் உள்ளது,” எனவும் காவல்துறைத் தலைவர் முகம்மது கலிட் தெரிவித்தார்.

அரச மலேசிய காவல்துறை ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய இரவு விருந்தில் கலந்துகொண்டபோது இந்த விவரங்களை அவர் வழங்கினார்.

பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டோரின் அடையாளங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, இதுவரை அது பெறப்படவில்லை என்றார் அவர். ஆனாலும் அவர்கள் யாவரும் பல இனங்களைச் சேர்ந்த மலேசியர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவர் பதிலளித்தார்.

நீதிமன்ற கைதாணையைப் பெற்றபிறகு, பாகிஸ்தானின் தேசிய இணையக் குற்ற விசாரணை முகவை பாஹ்ரியா நகரில் உள்ள காசா டவர் என்ற இடத்தில் அதிரடி சோதனை நடத்தியதாக அந்நாட்டு ப்ரோபாகிஸ்தான் இணையத்செய்தித்தளம் அறிவித்தது.

அங்கிருந்த மின்னியல் சாதனங்களை சோதித்தபோது, மலேசியர்களை ஏமாற்ற அவ்விடம் பயன்பட்டது என்பது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணையின்படி கம்போடியாவில் இருந்து ஒரு மலேசியர் குற்றக்கும்பலை இயக்கியுள்ளார். மோசடியில் பெற்ற பணம் கிரிப்டோ கரன்சி எனப்படும் மின்னிலக்க நாணயமாக பரிவர்த்தனை செய்யப்பட்டு பிறகு ஒரு சீனர், அவற்றை பாகிஸ்தானிய ரூபாயாக மாற்றியுள்ளார். அந்த சீனர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எத்தனை பேர் மோசடியில் சிக்கினர், எவ்வளவு பணம் இழக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்