மலேசியாவில் நான்கு மாதங்களில் 13,000 புதர் தீச் சம்பவங்கள்

மலேசியாவில் நான்கு மாதங்களில் 13,000 புதர் தீச் சம்பவங்கள்

1 mins read
ebfb3a4d-ecad-49c3-8717-82f62206dfcb
2025ஆம் ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு புதர் தீச்சம்பவங்கள் மலேசியாவில் பதிவாகி உள்ளன. - படம்: த ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் நான்கு மாதங்களில் குறைந்தபட்சம் 13,000 புதர் தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நிகழ்ந்த அந்தச் சம்பவங்கள் 2025ஆம் ஆண்டு முழுவதும் ஏற்பட்ட புதர் தீச்சம்பவங்களைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு.

சூடான, வறண்ட வானிலை காரணமாக புதர் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று கூறிய மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் முகம்மது இவ்வாறு திடீரென்று அந்தச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலையளிக்கும் போக்கு என்றார்.

“ஏப்ரல் மாதம் வரை 13,775 புதர் தீச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டு முழுவதும் நிகழ்ந்த அத்தகைய தீச்சம்பவங்களைவிட அதிகம்,” என்றார் அவர்.

2025ஆம் ஆண்டு முழுவதும் பதிவான புதர் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 7,984 மட்டுமே.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு 9,294 புதர் தீச்சம்பவங்கள் நிகழ்ந்திருந்த நிலையில் 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 13,182ஆக அதிகரித்தது.

புதர் தீ என்பது புதர்கள், புற்கள், அடர்செடிகள் போன்ற தாவரங்களை உள்ளடக்கிய திறந்தவெளித் தீச் சம்பவங்களைக் குறிக்கிறது.

காடுகளிலும் தோட்டங்களிலும் நிகழும் தீச் சம்பவங்களிலிருந்து அவை தனித்தனியாக வகைப்படுத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்