வாஷிங்டன்: குடிநுழைவு பிரச்சினைகள், நாடுகடத்தல் போன்ற அமலாக்க நடவடிக்கையில் தமது இரண்டாம் தவணைப் பதவிக்காலத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தற்போது ஹெச்1பி விசா திட்டம் மீது தமது கவனத்தை திருப்பியுள்ளார்.
அதன்படி, அத்தகைய விசாக்களுக்கு விண்ணப்பம் செய்வோர், முன்கட்டணமாக $130,000 (அமெரிக்க டாலர் $100,000) செலுத்த வேண்டும் என்று கூறும் அரசாணை ஒன்றை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) அன்று வெளியிட்டுள்ளார். அந்தச் சட்டம் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வரும்.
ஹெச்1பி குடிநுழைவு விசா திட்டம், அமெரிக்க நிறுவனங்கள் உயர்கல்வி தேர்ச்சிபெற்ற வெளிநாட்டவரைச் சிறப்புத் தொழில்களில் பணியமர்த்துவது பற்றியதாகும். அந்தத் திட்டத்தை சரிவர செயல்படுத்தாததால், அமெரிக்கப் பணியாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட ஊழியர் பற்றாக்குறையை தீர்க்க, 1990ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, விவசாயத்துக்கென மெக்சிகோ நாட்டினரும், 1950களில் ஸ்பெயினின் கால்நடைகளை மேய்ப்பவர்களும் அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். அண்மையில் 1990களில் பிலிப்பீன்ஸ் பல தாதியர்களை வழங்கியது.
தற்காலிக விவசாய பணிகளுக்காக ஹெச்2ஏ திட்டத்திலும் இதர பணிகளுக்காக ஹெச்2பி திட்டத்திலும் ஊழியர்கள் வேலை செய்ய முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்பத் துறையில் அறிவியல், கணிதம், கணினித் திறன் வாய்ந்தோர் மட்டுமே ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர். இத்துறையில் பற்றாக்குறை உள்ளதாக அந்தத் துறைசார்ந்த நிறுவனத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அதிபர் டிரம்ப், அவரது நெருங்கிய வலதுசாரி ஆதரவாளரான திரு.ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை 2024 டிசம்பரில் செயற்கை நுண்ணறிவுத்துறை ஆலோசகராக நியமித்ததும் இந்தப் பிரச்சினை பெரிதாகியது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான பச்சை அட்டை திட்டத்தின்படி, ஒரு நாட்டுக்கு, அதிகபட்சம் 7விழுக்காடு என்ற கட்டுப்பாட்டை திரு ஸ்ரீராம் எதிர்த்து, திறன் வாய்ந்தோர் அதிகம் வரவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தார். பெரும் மக்கள் வளத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளை, அமெரிக்காவின் புதிய திட்டம் பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.