பேங்காக்: தாய்லாந்தில் சட்டவிரோத இணையச் சூதாட்டம், பணமோசடி வழக்கில் முன்னாள் செனட்டர் ஒருவரின் மகனுக்கு 132 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நராயுத் நராகேவ், முன்னாள் செனட்டர் சாங்சித் பிரியரங்சனின் மகன் நரோட் பிரியரங்சன் உட்பட ஒன்பது பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
அனுமதி இன்றி இணையத்தில் சூதாட்டத்தை நடத்தியது, மின்னியல் ஊடகங்களில் அதற்கு விளம்பரம் செய்தது, பணமோசடி தொடர்பில் சதித்திட்டம் தீட்டியது, கூட்டாகப் பணமோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள்மீது சுமத்தப்பட்டன.
2023 டிசம்பர் 28 முதல் 2024 மே 27ஆம் தேதி வரை தலைமறைவாக இருந்த அவர்கள் பல்வேறு வழிகளில் இணையச் சூதாட்டத்தை நடத்தியதாகத் தாய்லாந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய மோசடியில் முன்னாள் செனட்டரின் மகனான நரோட்டிற்கு 132 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் தாய்லாந்துச் சட்டத்தின்கீழ் அவர் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையிலிருக்க வேண்டும்.
இவ்வழக்கில் முதலில் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. பிறகு, 2025 அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இருப்பினும் தீர்ப்பு வாசிக்கப்பட்டதுடன் அவருக்குக் கைதாணையும் பிறப்பிக்கப்பட்டது என்று ‘த நேஷன்’ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

