ஆசியாவில் இணைய மோசடிகளால் $147 பில்லியன் இழப்பு: ஐநா

ஆசியாவில் இணைய மோசடிகளால் $147 பில்லியன் இழப்பு: ஐநா

2 mins read
06775d7a-a788-4541-8e0e-3a250c931e64
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியாவும் மியன்மாரும் இணையவழி மோசடிக் கும்பல்களின் முக்கிய மையங்களாக உருவெடுத்துள்ளன. - மாதிரிப்படம்: பிக்சாபே

பேங்காக்: சென்ற ஆண்டில் கிழக்காசியா, தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வட்டாரங்களில் எல்லை தாண்டிய இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் 88.3 பில்லியன் முதல் 114.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$147.3 பில்லியன்) வரை இழந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவான 18 பில்லியன் முதல் 38 பில்லியன் டாலர் வரையிலான இழப்புடன் ஒப்பிடுகையில், இது மூன்று மடங்கிற்குமேல் அதிகம்.

தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியாவும் மியன்மாரும் இத்தகைய அனைத்துலகக் குற்றக் கும்பல்களின் முக்கிய மையங்களாக உருவெடுத்துள்ளன.

அங்குள்ள பாதுகாப்புமிக்க வளாகங்களிலிருந்து போலி காதல் வலைகள், மின்னிலக்க நாணய முதலீட்டு மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. பெரும்பாலும் முதலீட்டு மோசடிகள் மூலமே அதிக அளவு நிதி இழப்பு நேரிட்டுள்ளது.

கடந்த ஈராண்டுகளில் சீனா, தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளில்தான் இணையவழி மோசடிகள்மூலம் அதிக நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அம்மூன்று நாடுகளும் பல பில்லியன் டாலரை இணையவழி மோசடிகளில் இழந்துவிட்டதாக ஐநா அறிக்கை குறிப்பிட்டது.

அத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரில் சிலர் தன்விருப்பத்தின் பேரில் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பாலார் ஆட்கடத்தல்மூலம் மோசடிக் கும்பலிடம் சிக்கி, இணையவழி மோசடிகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் உலகம் முழுவதும் உள்ள இணையப் பயனீட்டாளர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றனர்.

அந்த மோசடிக் குழுக்கள் பெருநிறுவனங்களைப் போல ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இது சட்ட அமலாக்க அமைப்புகளுக்குப் பெருஞ்சவாலாக இருப்பதுடன், வட்டார நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக ஐநா எச்சரித்துள்ளது.

தென்கிழக்காசியாவில் உள்ள மோசடி வளாகங்களில் குறைந்தது எண்பது நாடுகள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து மையங்களைப் பயன்படுத்தி ஆள்களை வேலைக்குச் சேர்க்கும் கும்பல்கள் இயங்கி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, இவ்வட்டார நாடுகள் சட்டவிரோதக் குற்றங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ஆட்கடத்தல்மூலம் இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்கள்மீதும் தனிமனிதர்கள்மீதும் அமெரிக்காவும் பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளன. மேலும், கம்போடியாவிலிருந்து மோசடிக் கும்பல்களின் தலைவர்கள் பலர் கடந்த ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்