தென்கிழக்காசியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இதய நோய்க்கு ஆளானோரின் எண்ணிக்கை 148 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த வட்டாரத்தில் உயிரிழப்புக்கும் செயலற்றுப் போவதற்கும் இதய நோய்தான் முக்கியக் காரணம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு தென்கிழக்காசியாவில் மொத்தம் 37 மில்லியன் மக்கள் இதய நோய்க்கு ஆளாயினர். அந்த ஆண்டு இவ்வட்டாரத்தில் 1.7 மில்லியன் பேர் இதய நோய்க்குப் பலியாயினர்.
அமெரிக்காவின் சியேட்டல் நகரில் இயங்கும் சுகாதாரப் புள்ளி விவர, ஆய்வு (ஐஎம்எச்இ) அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இத்தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். 1990லிருந்து 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தென்கிழக்காசியாவின் 10 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சுகாதாரத் தகவல்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவுகள், இந்த வாரம் வெளியான தி லான்சட் பப்ளிக் ஹெல்த் (The Lancet Public Health) சஞ்சிகையின் சிறப்பிதழில் வெளியாயின. பொதுச் சுகாதாரத் துறை எதிர்நோக்கும் சுமைகளை அந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
இதய நோய், மனநல நோய்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளிட்டவை அச்சுமைகளில் அடங்கும்.