மித்ராவுக்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: இந்தியக் குழுக்கள் வரவேற்பு

மித்ராவுக்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: இந்தியக் குழுக்கள் வரவேற்பு

2 mins read
ed064c31-eaef-4992-84da-5a245ae9ccd7
மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய இளநிலைப் பட்டக்கல்வி மாணவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியின்போது பிரதமர் அன்வார் இப்ராகிம் (நடுவில்). - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: ‘மித்ரா’ பிரிவுக்குக் கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவில் (மித்ரா) அண்மைய காலமாக இந்தியச் சமூகத்தினர் பெற்று வரும் அனுகூலங்களுடன் கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் எட்டியிருக்கும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அண்மைய அறிவிப்பு அமைந்துள்ளதாக மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மித்ராவின் செயல்பாட்டிற்காக பிரதமர் அறிவித்திருக்கும் இந்த கூடுதல் ஐம்பது மில்லியன் ரிங்கிட் வணிகர்கள் மற்றும் மாணவர்கள் பலரின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்காகப் பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அதன் ஒதுக்கீடு 100 மில்லியன் ரிங்கிட் என்ற அளவிலேயே முடங்கிக் கிடந்தது. இன்றுதான் அந்தத் தடை உடைக்கப்பட்டிருக்கிறது,” என்று அமைச்சர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று (மே 10) மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘இந்திய மாணவர்களுடன் பிரதமர் சந்திப்பு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். 

முன்னர் பிரதமர்துறை அமைச்சின்கீழ் இயங்கிய மித்ரா, தற்போது மனிதவள அமைச்சின்கீழ் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளியல் மேம்பாட்டிற்காக ‘மடானி’ அரசு வழங்கி வரும் அர்ப்பணிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியச் சமூகத்திற்கான உதவிகள் மித்ராவுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஏனைய அமைச்சுகள் மற்றும் அமைப்புகள் வழியாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை அமைச்சர் ரமணன் நினைவுகூர்ந்தார்.

“அமானா இக்தியார் மலேசியா (ஏஐஎம்) மூலம் இந்தியப் பெண்களின் மேம்பாட்டிற்காக (PENN 2.0) 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, தெக்குன் (TEKUN) மூலம் இந்தியச் சமூகத்திற்குச் சிறப்பு நிதியாக 100 மில்லியன் ரிங்கிட்டும், எஸ்எம்இ வங்கி மூலம் இந்தியத் தொழிலதிபர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

தமது உரையில் மித்ராவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய திரு ரமணன், அடுத்த ஆண்டு முதல் இந்தியச் சமூகத்தின் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார். 

பாலர் பள்ளி முதல் உயர்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்பப் பயிற்சி வரை அனைத்து நிலைகளிலும் மித்ரா தனது கவனத்தைச் செலுத்தும் என்றும், இந்திய இளையர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க அனைத்துலக ரீதியிலான வியூகக் கூட்டணிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்ததாக பெர்னாமா கூறியது.

குறிப்புச் சொற்கள்