வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் 2025ஆம் ஆண்டு நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 153 பேர் கொல்லப்பட்டனர்; 243 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனின் மதிப்பீட்டைச் சுட்டி, அந்நாட்டு அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவத் தாக்குதல்களால் 2024ஆம் ஆண்டில் இருவர் உயிரிழந்ததாகவும் இருவர் காயமடைந்ததாகவும் பென்டகன் தெரிவித்திருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் பதிவான பொதுமக்கள் உயிரிழப்புகள், காயங்கள் அனைத்தும் 2025 ஏப்ரல் மாதம் ஏமனில் அமெரிக்கா நடத்திய மூன்று வான்வழித் தாக்குதல்களால் நேர்ந்தவை.
ஏமனில் தீவிரமாகச் செயல்பட்டுவரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் வலிமையைக் குறைப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று அமெரிக்க ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2026 பிப்ரவரி நிலவரப்படி, ஏமனில் நிகழ்ந்த மேலும் 15 சம்பவங்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்தியத் தளபத்தியம் மதிப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களால் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பென்டகன் அறிக்கை தெரிவிக்கிறது.
கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப்பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தியதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குறிப்பிட்டது.
2025 செப்டம்பர் முதல் அமெரிக்கா நடத்திய அத்தகைய தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இத்தகைய தாக்குதல்களை ‘சட்டவிரோதமான படுகொலைகள்’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளன.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அமெரிக்கக் குடிமையியல் உரிமைகள் ஒன்றிய அமைப்பும் சாடியுள்ளது.


