தோக்கியோ: இதுவரை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள மிகப்பெரிய காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஏறத்தாழ 1,700 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக மார்ச் 3ஆம் தேதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கிட்டத்தட்ட 4,600 குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் குறிப்பும் அனுப்பப்பட்டுள்ளது.
ஜப்பான் முழுக்க ஆக வெப்பமான கோடைக்காலம் பதிவான ஆண்டாக 2024 இருந்ததை அடுத்து இவாத்தேயின் வடக்குப் பகுதியில் என்றும் இல்லாத அளவுக்கு ஆகக் குறைவான மழைப்பொழிவுக்குப் பிறகு அங்கு கடந்த வாரம் ஒருவர் தீக்கு இரையானார்.
ஜப்பானின் ஓஹுனாட்டோ நகருக்கு அருகே எரிந்துகொண்டிருக்கும் தீ, பிப்ரவரி 27 முதல் சுமார் 2,100 ஹெக்டர் பரப்பளவைச் சாம்பலாக்கி உள்ளதாக நாட்டின் தீயணைப்பு, பேரிடர் நிர்வாகக் குழு மார்ச் 3ஆம் தேதி தெரிவித்தது.
ஜப்பானின் 14 பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், 16 ஹெலிகாப்டர்களின் உதவியோடு தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
காட்டுத்தீ மார்ச் 2ஆம் தேதி நிலவரப்படி 84 கட்டடங்களைச் சேதப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 2,000 பேர் அப்பகுதியை விட்டுச் சென்று தங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் இருப்பதாக அறியப்படுகிறது.