பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் புதன்கிழமை காலை மின்சாரப் பேருந்து ஒன்று மூன்று கார்களின்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
பரபரப்பான காலை நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பேரும் வாகன ஓட்டி ஒருவரும் காயமடைந்தனர்.
“நான் ராமா II சாலையில் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். பேருந்தின் நிறுத்துகருவி வேலை செய்யவில்லை என்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது,” என்று மின்சாரப் பேருந்தின் ஓட்டுநரான 59 வயது பூன்மீ ஜந்தபன் கூறினார்.
“நான்கு வழித்தடங்கள் உள்ள அச்சாலையில் நேராகப் பேருந்தை ஓட்டிச் செல்ல நான் முயன்றேன். ஆனால், பேங் பிர காவ் சந்திப்பில் சாலையைக் கடக்கும் வாகனங்கள்மீது மோதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்திலிருந்து அதிகாரிகளும் மீட்புப் படையினரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் இடிபாடுகளை அகற்றவும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சில வாகனங்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்டவர்களை அவற்றிலிருந்து மீட்க மிகவும் சிரமமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விபத்தால் பல கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் உயிர்ச்சேதம் இல்லை என்றும் கூறப்பட்டது.