தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியட்னாமில் வீசிய சூறாவளியால் 19 பேர் பலி

1 mins read
6595ad67-07be-444f-a9b2-ce0404b200d9
வியட்னாமின் பல்வேறு பகுதிகளில் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: வியட்னாமில் வீசிய ‘பூலாய்’ சூறாவளியால் 19 பேர் மாண்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 21 பேரைக் காணவில்லை என்றும் அது கூறியது.

இவ்வாண்டு வியட்னாமில் வீசிய கடுமையான சூறாவளியாக ‘பூலாய்’ பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வியட்னாமின் வடக்குப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 29) பூலாய் சூறாவளி கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது வியட்னாமின் வடக்கு மத்தியப் பகுதிகளில் கடுமையான காற்றும் மழையும் பெய்தது. கடல்பகுதிகளில் மோசமான சீற்றங்களும் இருந்தன.

கடந்த வாரம் பிலிப்பீன்சில் மையம் கொண்டிருந்த இந்தச் சூறாவளியால் குறைந்தது 10 பேர் மாண்டனர்.

வியட்னாமிய அரசாங்கத்தின் தரவுகள்படி சூறாவளியால் 88 பேர் காயமடைந்தனர்; 100,000க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின.

மேலும், நெல் மற்றும் பயிர்கள் பயிரிடப்பட்ட 10,000 ஹெக்டர் நிலம் பாதிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வியட்னாமின் பல்வேறு பகுதிகளில் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது.

இந்நிலையில், தலைநகர் ஹனோய் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காரணமாக வியட்னாமின் வடக்குப்பகுதியில் உள்ள சில கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின. அங்கு போக்குவரத்தும் மின்சார விநியோகமும் தடைபட்டன.

தெற்கு சீனக் கடலோரத்தில் அமைந்துள்ள வியட்னாமில் அடிக்கடி சூறாவளியும் கனத்த மழையும் பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்