ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பெரிய நிறுவனங்களின்கீழ் உள்ள ஆயிரக்கணக்கான செம்பனை எண்ணெய், மரக்கூழ் குத்தகை நிலங்கள் தீக்கு இரையாகியிருப்பதாக அண்மை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்தோனீசியாவின் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்ட ஆக மோசமான காட்டுத்தீச் சம்பவங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காட்டுத்தீச் சம்பவங்களால் பலர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதுடன் அண்டை வட்டார நாடுகளில் புகைமூட்டமும் கிளம்பியது.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து அக்டோபர் மாதம் வரை, எல் நினோ பருவநிலையாலும் கடுமையான வறட்சியாலும் இந்தோனீசியாவில் மொத்தம் 2.88 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு நிலம் தீயில் அழிந்தது.
செம்பனை எண்ணெய்யையும் மரக்கூழ் ஆலைகளையும் அமைக்க மிகப் பெரிய பரப்பளவில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதாக மழைக்காடு நடவடிக்கைக் கட்டமைப்பும் நுசந்திரா ஆட்லஸ் தளமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் காட்டுத்தீயில் அழிந்த நிலப்பரப்பின் அளவு 2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கிட்டத்தட்ட 35 விழுக்காடு அதிகம் என்ற நுசந்திரா அட்லஸ், கடந்த ஆண்டு இந்தோனீசியாவில் கடுமையான எல் நினோ நிலைகள் நிலவியதாகக் கூறியது.
தீ விபத்துகள் எவ்வாறு தொடங்கின என்பதை ஆய்வு உறுதிப்படுத்தவில்லை என்றபோதும் வேகமாக வேளாண் சலுகைப் பகுதிகளில் உள்ள கரிநிலங்கள் அழிவது, போதிய தீ மேலாண்மை முறைகள் இல்லாதது ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்களையும் காடழிப்புக்கு நிதியளிப்பதில் வங்கிகள் ஆற்றும் பங்கையும் அது சுட்டியது.
இந்தோனீசியாவின் ஏசியா பல்ப் அண்ட் பேப்பர் நிறுவனத்தின் சிறப்பு விநியோக நிறுவனமான ‘பூமி மேகர் ஹிஜாவ்’ காகிதக்கூழ் மரச் சலுகைப் பகுதியில் 14,600 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் எரிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தது.
மேலும், சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ்’ நிறுவனத்தால் நடத்தப்படும் மேற்கு கலிமந்தானில் உள்ள காயுங் அக்ரோ லெஸ்டாரி செம்பனைச் சலுகைப் பகுதிக்குள் குறைந்தது 3,742 ஹெக்டேர் நிலம் எரிக்கப்பட்டுள்ளதையும் அது அடையாளம் கண்டது.
அதில், கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் வனப்பகுதியும் அடங்கும்.
