பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் இரு உயிரிழப்புகளும் 56 பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாக மலேசியச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 58 விழுக்காடு பாதிப்புகள் கடும் வெயிலில் உடல் உழைப்பில் ஈடுபட்டது தொடர்புடையவை.
பினாங்கில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக 42 வயதான ஆடவர் உயிரிழந்துள்ளார்.
ஜார்ஜ் டவுன் மலைப்பாதையில் ஏப்ரல் 25ஆம் தேதி 30 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அவர், இலக்கை நெருங்கியபோது மயங்கி விழுந்து, ஏப்ரல் 26 அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது இந்த ஆண்டில் பினாங்கில் பதிவான முதல் உயிரிழப்பாகும்.
மற்றொரு மரணத்தில், வாகனத்திற்குள் விடப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை வெப்பத் தாக்குதலால் உயிரிழந்தது.
பதிவான 56 சம்பவங்களில் 47 பேர் வெப்பத்தினால் ஏற்பட்ட சோர்வாலும், மற்றவர்கள் கடுமையான வெப்பத் தாக்குதல், தசைப்பிடிப்புகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூடப்பட்ட பகுதிகளில் நிலவும் அதிக வெப்பம், வெளிப்புறத்தில் நீண்ட நேரம் கடுமையான உடல் உழைப்பு ஆகியவை உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி இத்தகைய உயிரிழப்புகளை உண்டாக்கியுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெப்ப பாதிப்பு அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
தாகம் இல்லாவிட்டாலும் அதிக நீர் அருந்தவும், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகச் செயல்பாடுகளை நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க குடை,தொப்பிகளைப் பயன்படுத்துமாறும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் போன்ற அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
வாகனம், மூடிய அறைகளில் குழந்தைகளைத் தனியாக விடுவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் இத்தகைய வெப்ப அலைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, மெட்மலேசியா (MetMalaysia) இணையத்தளம் வாயிலாக உடனுக்குடன் வானிலை நிலவரங்களை அறிந்துகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

