மணிலா: மியன்மாரில் இயங்கி வந்த மோசடி நிலையங்களிலிருந்து 200க்கும் அதிகமான பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நாடு திரும்புவதற்காக அவர்கள் பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் உதவியை நாடுகின்றனர் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) நிலவரப்படி மியன்மாரில் உள்ள பிலிப்பீன்ஸ் நாட்டவரை திருப்பி அனுப்பும்படி யங்கூன் நகரில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகத்துக்கு 222 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற வாரம் மியாவாடி மோசடி வளாகத்தில் நடத்தப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களில் அடங்குவர்.
அந்த 222 பிலிப்பீன்ஸ் நாட்டவரில் 66 பேர் தாய்லாந்துக்குச் சென்றனர். தாய்லாந்து அதிகாரிகள் அவர்களைக் கையாண்டு வருவதாகவும் பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
மேலும் ஒன்பது பிலிப்பீன்ஸ் நாட்டவர் யங்கூனில் அந்நாட்டுத் தூதரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால், அவர்களையும் மியன்மார் அதிகாரிகள்தான் கையாண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கங்களுக்கு இடையில் நடப்பில் உள்ள வழிமுறைகளின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் நாட்டவரைப் பாதுகாப்பாக நாடுகடத்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டு ஊழியர் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

