வாஷிங்டன்: காஸா அமைதிக் குழுவில் பிரான்ஸ் இணையாவிடில் அந்நாட்டு மதுபானங்கள்மீது 200 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ள காஸா அமைதிக் குழுவில் சேர பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த அழைப்பை மெக்ரோன் நிராகரிப்பார் எனக் கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் விரைவில் அவரது பதவியிலிருந்து வெளியேறப் போகிறார் எனக் கூறிய டிரம்ப், பிரான்ஸ் மதுபானங்களான ஒயின், ஷாம்பெயின் ஆகியவற்றிற்கு 200 விழுக்காடு வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் கூறினார்.
மேலும், அந்த வரி விதிப்பை அமல்படுத்தியவுடன் பிரான்ஸ் அதிபர் அமைதிக் குழுவில் இணைவார் என ஜனவரி 19ஆம் தேதி செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
மெக்ரோனின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதற்கு முன்னர், எக்காரணத்திற்காகவும் பதவி விலகமாட்டேன் எனப் பலமுறை அவர் சூளுரைத்தது குறிப்பிடத்தக்கது.
அமைதிக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இருக்க விரும்பும் நாடுகள் குறைந்தபட்சம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($1.28 பில்லியன்) நிதி வழங்கவேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதன் தலைவராகச் செயல்படுவார் என்றும் உறுப்பினர்கள் தொடர்பான முடிவுகளை எடுக்க அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்றும் முன்மொழியப்பட்ட குழுவின் வரைவு சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அமைதிக் குழுவில் சேர அழைக்கப்பட்டுள்ளார் என்பதையும் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
ஆனால், அதுகுறித்து கூடுதல் தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

