2024 உலகின் ஆக வெப்பமான ஆண்டாக அமையும்: விஞ்ஞானிகள்

1 mins read
243e3b52-243a-4338-b5dd-b32f332d03b9
எரியும் கரி, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கரியமிலவாயு, உலகவெப்பமயமாதலுக்கான முக்கியக் காரணம். - படம்: ராய்ட்டர்ஸ்

பிரசல்ஸ்: உலகின் ஆக வெப்பமான ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவாகக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கோப்பர்நிக்கஸ்’ பருவநிலை மாற்றத்திற்கான சேவை அமைப்பு கூறியுள்ளது.

அஸர்பைஜானில் அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ‘கோப்29’ பருவநிலை மாநாடு நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.

அந்த மாநாடு, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க அதிகமான நிதியை ஒதுக்குவதற்கு வெவ்வேறு நாடுகளை ஒப்புக்கொள்ள முயற்சி செய்யும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பின் வெற்றி, அந்தப் பேச்சுகளுக்கான எதிர்பார்ப்பைக் குறைத்துள்ளது.

ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை, சராசரி உலக வெப்பநிலை மிக அதிக அளவில் பதிவாகியுள்ளதால், இவ்வாண்டு ஆக வெப்பமான ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை என்று அமைப்பு கூறியது. எஞ்சியுள்ள மாதங்களில் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகப் பதிவானால் மட்டுமே, அந்த நிலை மாறும் என்று அமைப்பு தெரிவித்தது.

“இவ்வாண்டின் வெப்பநிலைக்கு பருவநிலை மாற்றமே அடிப்படைக் காரணம்,” என்று அமைப்பின் இயக்குநர் கார்லொ புவன்டெம்போ கூறினார்.

“பொதுவாகவே பருவநிலை சூடாகிக் கொண்டிருக்கிறது. அனைத்துக் கண்டங்களிலும், அனைத்துப் பெருங்கடல்களிலும் அது சூடாகி வருகிறது. அதனால், இதுவரை இல்லாத வெப்பநிலைகளைக் காணும் சாத்தியம் நிச்சயம் உள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்