பாரிஸ்: மத்திய ஆசியா, சஹேல் பகுதி, வடக்கு ஐரோப்பா ஆகிய வட்டாரங்களில் 2025ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது.
இதனை ஐரோப்பிய கோப்பர்நிக்கஸ் திட்டத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஏஎஃப்பி பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
உலகளவில், 2023, 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை பதிவான மூன்றாவது வெப்பமான ஆண்டாக 2025ஆம் ஆண்டு இருக்கும் என முன்னுரைக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் தனது ஆண்டு அறிக்கையில் கோப்பர்நிக்கஸ் இதை உறுதிப்படுத்தும்.
மத்திய ஆசியாவின் ஒவ்வொரு நாடும் அதன் வருடாந்தர வெப்பநிலை சாதனைகளை முறியடித்தன.
மேற்கு, வட மத்திய ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதியான சஹேல், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள் ஆகியவற்றின் வெப்பநிலை இவ்வாண்டு சாதனை அளவை எட்டியது.
மாலி, நைஜர், நைஜீரியா, புர்கினா பாசோ, சாட் ஆகிய நாடுகளின் வெப்பநிலையில் அரிதாகவே வேறுபாடு காணப்பட்டன.
அவற்றின் பருவகால சராசரியை விட வெப்பநிலை 0.7 டிகிரி செல்சியஸ் முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நைஜீரியாவின் மிகவும் வெப்பமான ஆண்டாக 2025ஆம் ஆண்டு உள்ளது. மேலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெப்பநிலை அதிகமாகப் பதிவானவற்றில் இது நான்காவதாகும்.
கிட்டத்தட்ட 10 ஐரோப்பிய நாடுகள் தங்கள் வருடாந்தர வெப்பநிலை சாதனையை முறியடிக்கும் தருவாயில் உள்ளன.
சுவிட்சர்லாந்து, பல போல்கன் நாடுகளில், கோடை கால வெப்பநிலை பருவகால சராசரியை விட 2 டிகிரி செல்சியசிலிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது.

