2026 வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டாக இருக்கக்கூடும்: வல்லுநர்கள்

2026 வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டாக இருக்கக்கூடும்: வல்லுநர்கள்

2 mins read
feb35ba4-88af-470e-88cf-2083965d9bff
வெப்பநிலை அதிகமாக இருப்பதால் ஜெர்மனியில் உள்ள ரைன் ஆற்றில் போதுமான நீர் இல்லை. - படம்: இபிஏ
Google News Preferred Icon

பெர்க்லி: என்றும் இல்லாத அளவு எல் நினோ பருவநிலை நிகழ்வின் தாக்கம் மோசமாக இருப்பதால் 2026ஆம் ஆண்டு வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டாக உருவெடுக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டாக இருக்கிறது. அதை 2026 விஞ்சிவிடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக லாப நோக்கமில்லா ஆய்வுக் குழுவான பெர்க்லி எர்த் மாதந்தோறும் வெளியிட்டுவரும் உலக வெப்பநிலைத் தரவுகள் ஆராயப்பட்டபோது தெரியவந்தது.

அதோடு, இதன் தொடர்பில் 2027 அதற்கும் மேலான வெப்பநிலையைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்க்லி எர்த்

இதுகுறித்துப் பேசிய பெர்க்லி எர்த்தின் தலைமை விஞ்ஞானி ராபர்ட் ரோஹ்ட, “அடுத்த ஆண்டையும் தாண்டிய காலகட்டத்தில் ஓரளவு திடுக்கிடும் நிகழ்வுகளை நாம் பார்க்க அதிக வாய்ப்புள்ளது,” என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) கூறினார்.

“அந்தக் காலகட்டத்தில், பொதுவாக 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான காலத்துக்குப் பிறகு ஏற்படவேண்டிய வானிலை நிலவக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல் நினோ, பல மாதங்களாக நீடிக்கும் பருவநிலை நிகழ்வாகும். அது உலகம் முழுவதும் பருவநிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக மேற்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பகுதிகள் வறண்டுபோகக்கூடும். அதேபோல், தெற்கு அமெரிக்கா போன்ற பகுதிகளில் கூடுதலாக மழை பெய்யக்கூடும்.

எல் நினோவின் சக்தி கணிக்கப்படும் முறை

பசிபிக் பெருங்கடலின் குறிப்பிட்ட ஒரு கடற்பகுதிக்குமேல் இருக்கும் வெப்பநிலையைக் கொண்டு எல் நினோவின் சக்தியை விஞ்ஞானிகள் கணிப்பர். அதன்படி, அந்தப் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை இயல்புநிலைக்கு நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஒப்புநோக்க, முன்னதாக 2015லிருந்து 2016ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த வெப்பநிலை 2.75 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது.

இந்த ஆண்டு எல் நினோ பருவநிலை முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கிற்று. அது பெரும் வீரியத்துடன் இருப்பதால் 2026ஆம் ஆண்டு வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டாக இருக்கும் வாய்ப்புகள், ஜூலையில் இருந்த 12 விழுக்காட்டிலிருந்து ஆகஸ்ட்டில் 69 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளதாக பெர்க்லி எர்த் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்