புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தமது 14 மாத பதவிக்காலத்தின்போது அரசாங்கத் திட்டங்களை விளம்பரப்படுத்த 700 மில்லியன் ரிங்கிட் (S$212 மி.) செலவு செய்ததன் தொடர்பிலான ஊழல் வழக்கு ஒன்றில் சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திங்கட்கிழமை (மார்ச் 3) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அஸாம் பக்கி, விசாரணை அதிகாரிகள் திரு இஸ்மாயிலை புதன்கிழமை (மார்ச் 5) விசாரணைக்கு அழைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
அண்மையில் கூட்டுரிமை வீடு ஒன்றிலிருந்து 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 16 கிலோ தங்கக்கட்டிகளையும் 170 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் உள்ளூர், வெளிநாட்டு நாணயங்களையும் ஆணையம் பறிமுதல் செய்திருந்தது.
“பிப்ரவரி 10ஆம் தேதி, திரு இஸ்மாயில் அவரது சொத்துகளை அறிவித்தார். பிப்ரவரி 19ஆம் தேதி, அவரிடமிருந்து நாங்கள் வாக்குமூலம் பெற்றோம். விசாரணை நான்கு, ஐந்து மணி நேரம் நடந்தது.
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டப்பிரிவு 36 (1)கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 177 மில்லியன் ரிங்கிட் சொத்துகள் குறித்து விசாரணை நடத்த புதன்கிழமை நாங்கள் அவரை மீண்டும் அழைக்கவிருக்கிறோம்,” என்றார் திரு அஸாம்.
2021 ஆகஸ்ட் முதல் 2022 நவம்பர் வரை மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக திரு இஸ்மாயில், 65, பதவி வகித்தார்.
பிப்ரவரி 21ஆம் தேதி, திரு இஸ்மாயிலின் மூத்த உதவியாளர்கள் நால்வரை ஆணையம் தடுத்து வைத்தது. விசாரணையின் ஓர் அங்கமாக நான்கு வளாகங்களில் அது திடீர் சோதனை நடத்தியது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு வளாகத்தில் இருந்த மூன்று பெட்டகங்களுக்குள் ரொக்கமும் தங்கக்கட்டிகளும் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வளாகம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் யென், ஸ்டெர்லிங் பவுண்ட், யூரோ, திர்ஹம் இவற்றுடன் சிங்கப்பூர், அமெரிக்க, ஆஸ்திரேலிய டாலரும் அடங்கும்.
“170 மில்லியன் ரிங்கிட்டில் 14 மில்லியன் ரிங்கிட் மட்டுமே உள்ளூர் நாணயமாக இருந்தது,” என்றார் திரு அஸாம்.