இந்தியர்களுக்கான ‘முட்ரா’ திட்டத்தின் கீழ் 220 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

இந்தியர்களுக்கான ‘முட்ரா’ திட்டத்தின் கீழ் 220 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2 mins read
0ae7bb78-a251-4fe0-bddd-75696da8d63b
கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி இந்தத் திட்டத்திற்கு 33.48 மில்லியன் ரிங்கிட் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: இந்திய தொழில்முனைவோரின் வாழ்வாதார வளர்ச்சிக்கு துணை புரியும் வகையில் மூலதனம் மற்றும் பொருளியல் ஊக்குவிப்பு திட்டமான ‘முட்ரா’-வின் (MUDRA), 220 மில்லியன் ரிங்கிட் நிதியை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்குச் சொந்தமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுக் கழகங்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் சி கியோங் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய சமூகத்தினரிடையே உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 2025ல் ஒதுக்கப்பட்ட சுமார் 160 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டில் 60 மில்லியன் ரிங்கிட் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அமைச்சின் கீழுள்ள ஐந்து முதன்மை திட்டங்களின் மூலம் ‘முட்ரா’ விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

“அதில் குறிப்பாக தெக்கூனுக்கு 120 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாட்டுக்கு 15 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ வங்கிக்கு 50 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியார் எனும் இந்திய மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்ட நிதி மூலம் 27 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறது. அதே நேரத்தில் SKM, பக்தி மதானி திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரிங்கிட், SKM சுழல் மூலதன நிதிக்கு 10 மில்லியன் ரிங்கிட் என மொத்தம் 11 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறியிருந்ததாக பெர்னாமா தெரிவித்தது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி இந்தத் திட்டத்திற்கு 33.48 மில்லியன் ரிங்கிட் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,805 இந்திய தொழில்முனைவோர் நேரடியாகப் பயனடைந்து வருவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

உலகளாவிய எரிசக்தி நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், வர்த்தக நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இந்திய சமூகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான ஓர் உத்திபூர்வ நடவடிக்கையே முட்ரா திட்டம் என்றும், இது வெறும் குறுகிய கால நிதி உதவி மட்டுமல்ல என்றும் திரு சிம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்