பொதுப் போக்குவரத்துப் பயணங்களால் மலேசியாவில் 225,000 டன் கரிம வெளியேற்றம் தவிர்ப்பு

பொதுப் போக்குவரத்துப் பயணங்களால் மலேசியாவில் 225,000 டன் கரிம வெளியேற்றம் தவிர்ப்பு

படம்: மலாய் மெயில்

29 Jul 2026 - 5:27 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: பொதுப் போக்குவரத்தை அதிகமானோர் பயன்படுத்தியதால் கார்ப் பயணம் குறைந்ததன் மூலம் 2025ஆம் ஆண்டில் 225,000 டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளதாகப் ‘பிரசரானா மலேசியா’ நிறுவனம் புதன்கிழமை (ஜூலை 29) தெரிவித்தது.

நாள்தோறும் சராசரியாக 1.31 மில்லியன் பேர் பயணம் செய்ததன் அடிப்படையில் கரிம வெளியேற்ற அளவு கணக்கிடப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவின் ஆகப்பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான பிரசரானாவின் ஓய்வுபெறும் தலைவரும் குழுமத் தலைமை நிர்வாகியுமான அமீர் ஹம்தான் அந்நிறுவனத்தின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நீடித்த நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுப் பேசினார்.

பிரசரானாவின் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிறுவன நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளை அந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

மேனாரா பிரசரானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தி சிட்டி ஆன் தி மூவ்’ எனும் தலைப்பிலான அந்த அறிக்கை, நிறுவனத்தின் 28 ஆண்டுகால வரலாற்றில் வெளியிடப்பட்ட முதல் நீடித்த நிலைத்தன்மை தொடர்பிலான அறிக்கையாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமீர் ஹம்தான், “எங்களது சேவைக் கட்டமைப்பு தினமும் 377,000 கார்களைச் சாலைகளிலிருந்து குறைத்துள்ளது. அதன் மூலம் 225,000 டன் கரியமில வாயு வெளியேறுவது தவிர்க்கப்பட்டது. குறைந்த கரியமில வாயுவை வெளியிடும் மலேசியாவின் எதிர்கால மாற்றத்தில் அது நேரடியாகப் பங்களிக்கிறது,” என்று தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து என்பது பருவநிலை மாற்றத்திற்கான தீர்வின் ஒரு பகுதி மட்டுமல்ல; நீடித்த, வாழத் தகுந்த மற்றும் இணைக்கப்பட்ட நகரங்களை உருவாக்குவதற்கான மிக வலிமையான காரணிகளில் அதுவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புறப் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை 40 விழுக்காடாக அதிகரிக்கும் இலக்கிற்கு ஆதரவளிக்கும் வகையில், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட பிரசரானாவின் நீடித்த நிலைத்தன்மை திட்டவரைவு 2023-2030க்கு ஏற்ப அறிக்கை அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபொதுப் போக்குவரத்துகரிம வெளியீடு