தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்ட 23 மலேசியர்கள் துருக்கியில் உள்ளனர்: அன்வார்

1 mins read
5a819c14-dbd1-49af-9f50-cd24cf2859e3
23 மலேசியர்களும் இஸ்ரேலின் ராமோன் விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம்மூலம் சனிக்கிழமை (அக்டோபர் 4) துருக்கி கொண்டு செல்லப்பட்டனர். - படம்: மலேசிய வெளியுறவு அமைச்சு

கோலாலம்பூர்: காஸா மக்களுக்குக் கடந்த வாரம் தொண்டூழியர்கள் பலர் சிறு படகுகள்மூலம் உதவிப்பொருள்களை எடுத்துச் சென்றனர். அப்போது அவர்களை இஸ்ரேல் தடுத்துவைத்தது.

இந்நிலையில், இஸ்ரேல் தடுத்துவைத்த நூற்றுக்கணக்கான தொண்டூழியர்களில் 23 பேர் மலேசியர்கள். அவர்களை இஸ்ரேலிய அரசாங்கம் துருக்கிக்கு அனுப்பியுள்ளது. அங்கிருந்து அவர்கள் மலேசியாவிற்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தடுத்துவைக்கப்பட்ட மலேசியர்களைப் பத்திரமாகத் தாயகத்திற்கு அனுப்பி வைக்கத் துருக்கிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. மலேசியா, கத்தார், அமெரிக்கா, துருக்கி நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது,” என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“இஸ்ரேலிலிருந்து வெளியேற மூன்று மலேசியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் அனைவரையும் பாதுகாப்பாக மலேசியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதால் விருப்பம் இல்லாத நபர்களையும் விமானத்தில் ஏற்றினோம்,” என்றார் திரு அன்வார்.

23 மலேசியர்களும் இஸ்ரேலின் ராமோன் விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம்மூலம் சனிக்கிழமை (அக்டோபர் 4) துருக்கி கொண்டு செல்லப்பட்டனர்.

துருக்கியில் ஒரு நாள் தங்கியிருந்த பிறகு அந்த மலேசியர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) இரவு அல்லது திங்கட்கிழமை (அக்டோபர் 6) காலை நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நாடு திரும்பும் மலேசியர்களிடம் உடல்நலம், மனநலப் பரிசோதனைகளும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸாமலேசியா