கொழும்பு: இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கும்பல்களைச் சேர்ந்த கைதிகள் மோதிக்கொண்டதில் காவலர்கள் ஐவர் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது சிறை அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டனர்.
இதுவே இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த ஆக மோசமான சிறைக் கலவரம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளும் காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மாலையில் தொடங்கிய மோதல், திங்கட்கிழமை (ஜூலை 6) அதிகாலையில் கட்டுக்கடங்காமல் பெரும் வன்முறையாக வெடித்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறைச்சாலையெங்கும் வன்முறை பரவியபோது கலவரம் தொடங்கிய இடத்துக்கு அருகிலுள்ள கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் கூரைமீது ஏறி தங்களை விடுவிக்குமாறு முழக்கமிட்டனர். அப்போது, கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் அதன்மீது இருந்த பெண் கைதிகள் சிலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நிகழ்ந்தது.
கலவரத்தில் ஈடுபட்டோரைக் கலைத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த இலங்கைக் காவல்துறையின் மின்னல் படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியிலேயே நிறுத்திவைக்கப்பட்டனர் என்றும் சிறைச்சாலைக்கு உள்ளே அவர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலைமையைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளையும் ஹெலிகாப்டர்களையும் இலங்கை விமானப் படை பயன்படுத்தியது. அப்போது, சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூடினர். கைதிகளின் நலன், பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும் சிறைச்சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளின் வசிப்போர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகள் அவற்றின் கொள்ளளவைவிட நான்கு மடங்கு அதிகமான கைதிகளைக் கொண்டுள்ளதாக அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

