வாஷிங்டன்: மோசமான வானிலையால் சென்ற ஆண்டு (2024), ஏறத்தாழ 242 மில்லியன் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு (UNICEF) தெரிவித்துள்ளது.
அவர்கள் 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள குழந்தைகளில் கிட்டத்தட்ட ஏழில் ஒரு குழந்தை இவ்வாறு பாதிக்கப்பட்டதாக ஜனவரி 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ‘யுனிசெஃப்’ கூறியது.
பருவநிலை மாற்றம் அலட்சியப்படுத்தப்பட்டதால் இவ்வாறு நேர்ந்ததாக அது வருத்தத்துடன் குறிப்பிட்டது.
வெப்ப அலைத் தாக்கம் ஆக அதிகமாகப் பாதித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
மோசமான வானிலையால் சிறுவர்கள் எளிதில் பாதிக்கப்படுவர் என்று ‘யுனிசெஃப்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் எச்சரித்தார்.
“பெரியவர்களைவிட வேகமாக சிறுவர்களின் உடல்வெப்பம் கூடுகிறது. அவர்களுக்கு வியர்வை சரிவர வெளியேறுவதில்லை. அதேவேளை உடல்வெப்பம் மிக மெதுவாகவே குறைகிறது,” என்றார் அவர்.
வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்க இயலாத வகுப்பறைகளில் குழந்தைகளால் பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டாலோ பள்ளிக் கட்டடம் சேதமடைந்தாலோ அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதை அவர் சுட்டினார்.
புதைபடிம எரிபொருள்களைக் கட்டுப்பாடின்றி எரிப்பது உட்படப் பல்லாண்டுகளாகத் தொடரும் மனித நடவடிக்கைகளால் புவி வெப்பமடைந்ததுடன் பொதுவான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வேளையில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 242 மில்லியன் பிள்ளைகள் என்ற எண்ணிக்கை, மதிப்பீட்டின் அடிப்படையிலானது மட்டுமே என்று ‘யுனிசெஃப்’ கூறியுள்ளது.
சென்ற ஆண்டு பல்வேறு இடங்களில் பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்தாயின. விடுமுறைக் காலம் மாற்றப்பட்டது. பள்ளிகள் தாமதமாகவே மீண்டும் திறக்கப்பட்டன. பாடங்களுக்கான கால அட்டவணைகள் மாற்றப்பட்டன. சில இடங்களில் பருவநிலை இடர்களால் பள்ளிகள் சேதமடைந்தன அல்லது முற்றிலுமாக அழிந்தன என்பதைத் தரவுகள் காட்டுகின்றன.
பங்ளாதேஷ், இந்தியா, கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் வெப்பநிலை வெகுவாக உயர்ந்த நிலையில், ஏறத்தாழ 171 மில்லியன் பிள்ளைகள் வெப்பத் தாக்கத்துக்கு ஆளாயினர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 118 மில்லியனாகும். பிலிப்பீன்சில் இதனால் குளிரூட்டி வசதி இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன.
கடந்த செப்டம்பரில் தெற்காசிய நாடுகளில் சூறாவளி, கனமழை ஆகியவற்றாலும் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.