தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான், மலேசியாவுக்கு 25%, லாவோசுக்கு 40%: ஆகஸ்ட் முதல் டிரம்ப் வரிவிதிப்பு

2 mins read
4764b902-6c8f-4784-a38e-664035c91231
ஒரு பக்கம் அரசாங்க பிரதிநிதிகள் வர்த்தக ஒப்பந்தப் பிரிவுகள் குறித்து சிக்கலான பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மறுபுறும் வர்த்தகங்கள் கடுமையான எதிர்காலத்துக்கு தங்களை தயார் செய்துகொண்டு வருகின்றன. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் குறிப்பிட்ட காலவரைக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்ளாத நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாடுகளுக்கு எதிரான வரிவிதிப்பு கடிதங்களை அனுப்பியுள்ளார்.

ஏப்ரலில் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பை அவர் ஜூலை 9 வரை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தார். தற்பொழுது ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகியவற்றுடன் மற்ற நாடுகளுக்கும் வரிவிதிப்பைத் தெரிவிக்கும் கடிதங்களை அவர் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

முதலாவதாக, தனது கிழக்கு ஆசிய நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்காவுக்குள் வரும் இறக்குமதிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஆகிய இருவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் அதுபோன்ற கடிதங்கள் அனுப்பப்பட்டன. அமெரிக்காவுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்பந்தத்தை எட்டக் கடுமையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மலேசியா, இந்தோனீசியாவுக்கு அதிபர் டிரம்ப் முறையே 25 விழுக்காடு, 32 விழுக்காடு என்ற விகிதத்தில் வரி விதித்துள்ளார்.

தாய்லாந்துக்கு எதிராக 36 விழுக்காடும் லாவோஸ், மியன்மாருக்கு எதிராக 40 விழுக்காடு வரியையும் அவர் விதித்துள்ளார். இவை யாவும் ஏப்ரலில் அவர் தானாக அறிவித்த வரி விழுக்காட்டுடன் ஓரளவு ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.

டிரம்ப் ஏப்ரலில் அறிவித்த வரிவிதிப்பு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இருப்பினும், மலேசியா, ஜப்பான் ஆகியவற்றுக்கான புதிய வரிவிதிப்பு விகிதம் முன்னர் அறிவிக்கப்பட்ட 24% வரியைவிட சற்று அதிகம். அதேபோல், லாவோஸ், மியன்மாருக்கு எதிராக முறையே முன்னர் அறிவிக்கப்பட்ட 48%, 44% என்ற விகிதத்திலிருந்து தற்போதைய வரி 40 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு மாற்றங்கள் குறித்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் கம்போடியாவுக்கு தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ள குறைவான வரிவிதிப்பே அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அந்நாட்டுக்கு முன்னர் 49 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், அதன் மீதான வரிவிதிப்பு 36 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், இந்தியா, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கான வரிவிதிப்பு பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை.

குறிப்புச் சொற்கள்