மதியிறுக்கம் உடையோருக்கு பாகாங்கில் 25மி.ரிங்கிட் மதிப்பில் பராமரிப்பு நிலையம்

மதியிறுக்கம் உடையோருக்கு பாகாங்கில் 25மி.ரிங்கிட் மதிப்பில் பராமரிப்பு நிலையம்

படம்: ஃபேஸ்புக் / மலேசிய தேசிய மதியிறுக்க சங்கம்

31 Oct 2026 - 6:25 pm

2 mins read

குவாந்தான்: மலேசிய தேசிய மதியிறுக்கச் சங்கம் மலேசிய ரிங்கிட் 25 மில்லியன் (S$7.8 மில்லியன்) செலவில் மதியிறுக்கம் உள்ளோரின் பராமரிப்புக்கான நிலையம் ஒன்றை பாகாங் மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பாகாங் மாநில அரசியான அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா, சனிக்கிழமை (அக்டோபர் 31) அம்மாநிலத்தின் தாமான் கெலோராவில் நடந்த குவாந்தான் அறவிற்பனை 2026 நிகழ்ச்சியை தலைமையேற்று வழிநடத்த வந்தபோது சங்கம் அதன் திட்டங்களைப் பகிர்ந்தது.

அவர்களைப் பராமரித்தோரை இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள மதியிறுக்க நோய் உள்ளோர்களை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பதற்கென இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேசிய மதியிறுக்கச் சங்கத்தின் புரவலர் மேகாட் அகம்மது ஷாஹ்ராணி மெகாட் ஷஹாருதின் கருத்துரைத்தபோது, 30 முதல் 50 வயதுக்குட்பட்ட குறிப்பாக பராமரிப்பாளர்களை இழந்து வாடும் மதியிறுக்கம் கொண்டோர் பயனடையும் வகையில் அந்த நிலையம் மேம்படுத்தப்படும் என்றார். அவர்களுக்கு ஏற்ற வாழ்விடமும், தொடர் பராமரிப்பும் அங்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

அந்த நிலையத்தில் 200 குடியிருப்பாளர்கள் தங்கலாம் எனவும் அதன் மேம்பாட்டுக்கு மலேசிய ரிங்கிட் 25 மில்லியன் தேவைப்படலாம் என அண்மையில் முடிவடைந்த ஆய்வில் கணிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

“மதியிறுக்கம் உள்ள ஒருசிலரின் பெற்றோர் மறைந்ததும் அவர்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களோ, உடன்பிறந்தோரோ அவர்களைப் பராமரிக்க முன்வருவதில்லை. அவர்கள் கைவிடப்படாமல் ஓரிடத்தில் வாழ்வதற்கு நாங்கள் இடம் அமைக்கவுள்ளோம்,” என்று நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் இத்திட்டத்துக்குப் பாகாங் அரசாட்சி ஆதரவு நல்கும் என்று எதிர்பார்ப்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

பாகாங் மாநிலம் மட்டுமல்லாமல் மலேசியாவின் அனைத்து வட்டாரங்களில் இருந்தும் மதியிறுக்கம் உள்ள தனி நபர்களுக்கு இத்திட்டப்படி ஒரு சரணாலயமாக நிலையம் அமையலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பல மேல்மட்ட வர்த்தக நிறுவனங்களிடம் ஆதரவும் நன்கொடையும் பெற சங்கம் முயன்றுவருகிறது. எனினும் நிலத்தைப் பெறுவதே முதன்மைத் தேவையாக உள்ளது. அதன்பிறகு நன்கொடைத் திரட்டுக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என்றார் திரு புரவலர் மேகாட் அகம்மது ஷாஹ்ராணி.

இதற்கிடையே நாடு முழுவதும் சங்கம் இயங்கிட ஓர் ஆண்டுக்கான செலவு மலேசிய ரிங்கிட் 7 மில்லியன். ஆனால் மொத்த வரவு, மலேசிய ரிங்கிட் 4 மில்லியன்தான் என்றார் அவர். ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக மலேசிய ரிங்கிட் 3 மில்லியனைத் திரட்டுவது பெருஞ்சவாலாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மதியிறுக்கம் உள்ளோரின் கல்விக்கும் சிகிச்சைக்கும் பயிற்சிக்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. அவர்களைத் தனிப்பட்ட வகையில் அதிக கவனத்துடன் கையாள வேண்டியுள்ளதால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையிலான எண்ணிக்கை விகிதத்தைச் சமநிலையாக அமைப்பது எளிதல்ல.

“எனவே அவர்களுக்கான கட்டணங்களைக் கட்டுப்படியாக வைத்து சமுதாயத்தின் அனைத்து நிலையில் உள்ளோரும் பயனடையும் விதமாக சங்கம் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அவரவர் சூழ்நிலைக்கேற்ப வசதி குறைந்தோருக்கு உதவி வழங்கும் அடிப்படையில் சங்கம் செயலாற்றுகிறது,” என்று திரு புரவலர் மேகாட் அகம்மது மேலும் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்