அத்துமீறிப் பறந்த 250 ஆளில்லா வானூர்திகள்: கம்போடியாமீது தாய்லாந்து குற்றச்சாட்டு

1 mins read
7811523a-2fa2-4c9c-9248-02125e16db21
டிசம்பர் 14ஆம் தேதி சண்டையின்போது காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கம்போடியப் படைவீரர். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: சண்டைநிறுத்த உடன்பாட்டை மீறி, தனது பகுதிக்குள் கம்போடியா 250க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட்டதாகத் தாய்லாந்து ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கம்போடியா டிசம்பர் 26ஆம் தேதி அவ்வாறு செய்ததாகத் தாய்லாந்து குறிப்பிட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த எல்லை மோதலைத் தொடர்ந்து, டிசம்பர் 27ஆம் தேதிமுதல் சண்டையை நிறுத்திக்கொள்ள தாய்லாந்தும் கம்போடியாவும் இணங்கின.

இந்நிலையில், கம்போடியாமீது தாய்லாந்து புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது. அத்துடன், தன் பிடியில் இருக்கும் கம்போடியப் படை வீரர்களை விடுவிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அது மிரட்டல் விடுத்துள்ளது.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் சீனாவில் சந்தித்து, இருதரப்பு நம்பிக்கையையும் உறவுகளையும் மறுகட்டமைப்பது தொடர்பில் இருநாள் பேச்சுவார்த்தையை முடித்துள்ளனர். இந்நிலையில், தாய்லாந்தின் புதிய குற்றச்சாட்டு, சண்டைநிறுத்தம் நீடிக்குமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கம்போடியப் பகுதியிலிருந்து 250க்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகள் தாய்லாந்தின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறிப் பறந்தது கண்டறியப்பட்டது,” என்று ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில் தாய்லாந்து ராணுவம் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.

மேலும், “இத்தகைய செயல்கள் சினமூட்டுவதாகவும் பதற்றத் தணிப்பு நடவடிக்கைகளை மீறுவதாகவும் இருதரப்பு இணக்கத்திற்கு முரணாகவும் உள்ளன,” என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்