வாஷிங்டன்: அமெரிக்காவில் 2,977 உயிர்களைப் பலிகொண்ட செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், நியூயார்க், விர்ஜீனியா, பென்சில்வேனியா ஆகிய மூன்று சம்பவ இடங்களிலும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) கடைப்பிடிக்கப்பட்டது.
பிரிட்டனின் லண்டன் குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவிலும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதையும் நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டன.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அல்-காய்தா பயங்கரவாதிகள் நான்கு விமானங்களைக் கடத்தி நடத்திய அந்தத் தாக்குதல், உலக நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு, உளவுத்துறை கொள்கைகளை அடியோடு மாற்றியமைத்தது.
அமெரிக்காவின் உளவு அமைப்பு (சிஐஏ) , புலனாய்வு அமைப்பு (புஎஃப்பிஐ) ஆகியவற்றினிடையே போதிய உளவுத்தகவல் பகிர்வு இல்லாததே அந்தப் பேரழிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
அந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட மேற்கத்திய நாடுகள், தங்களின் உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தகவல் பரிமாற்றங்களை வலுப்படுத்தின.
எனினும், 2003 ஈராக் போர், 2005 லண்டன் குண்டுவெடிப்பு போன்ற நிகழ்வுகள் உளவுத்துறையின் மதிப்பீட்டுத் தவறுகளை மீண்டும் வெளிப்படுத்தின.
கடந்த 25 ஆண்டுகளில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதால், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ராணுவ வளர்ச்சி, உலகளாவிய சவால்களைத் துல்லியமாகக் கணிப்பதில் மேற்கத்திய நாடுகள் சற்றே பின்தங்கியதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
தற்போது செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் உளவுத்துறையின் செயல்பாடுகள் வேகமெடுத்து வரும் சூழலிலும், வட்டாரப் பாதுகாப்பு, உத்திசார் முடிவுகளில் ஏற்படும் தவறுகள் இன்றும் சவாலாகவே நீடிக்கின்றன.
9/11 தாக்குதலின் கால் நூற்றாண்டு நினைவுகூரப்படும் வேளையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அப்பால் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து வரும் அரசுசார் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உலக நாடுகள் உள்ளதாக அரசியல் கணிப்பாளர்கள் கருத்துரைத்தனர்.
செப்டம்பர் 11 தாக்குதலில் 19 கடத்தல்காரர்களைத் தவிர்த்து மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். நான்கு விமானங்களிலிருந்த 246 பயணிகளும் கொல்லப்பட்டனர். இரட்டை கோபுரங்களில் 2,606 பேரும், பென்டகனில் 125 பேரும் பலியாயினர்.
உயிரிழந்தவர்களில் 2 வயதான கிறிஸ்டின் லீ ஹான்சன் ஆக இளையவர், 82 வயதான ராபர்ட் நார்டன் மூத்தவராவார். 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலியாயினர். இதில் 441 அவசரகால மீட்புப் பணியாளர்களும் அடங்குவர்.
மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் நச்சுப் புகையால் நோய்வாய்ப்பட்டும் பாதிக்கப்பட்டனர்.

