தோக்கியோ: ஜப்பானில் சரிந்துவரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், அதன் தலைநகரம் தோக்கியோவை ஆட்சி செய்யும் அரசாங்கம், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் திருமணச் செயலியை அறிமுகப்படுத்தியது.
அந்தச் செயலி மூலம் இதுவரை 265 திருமணங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திருமணம் செய்துகொள்ள ஆர்வமுள்ளவர்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீவிரமாகத் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
அந்தத் தயக்கத்தைப் போக்கி, திருமணத்தில் உண்மையான ஆர்வம் கொண்டவர்களை மட்டும் ஊக்குவிக்கும் வகையில் ‘தோக்கியோ என்முசுபி’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தச் செயலியில் இணைய விரும்புவோர் தாங்கள் சட்டப்படி திருமணமாகாதவர் என்பதை சான்றிதழ்மூலம் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், தங்களின் வருமானச் சான்றையும் சமர்ப்பித்து, அதிகாரிகளுடனான இணையவழி நேர்காணலிலும் பங்கேற்றுத் தேற வேண்டும்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, அந்தச் செயலியில் இணைய விண்ணப்பித்த 36,000 பேரில் 16,000 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்; மேலும் 760 இணையர் காதல் வயப்பட்டனர்.
ஜப்பானில் கடந்த 2025ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து பத்தாவது ஆண்டாகச் சரிந்து, 671,236 ஆகப் புதிய முன்னில்லாத சரிவைச் சந்தித்தது.
அதே வேளையில், நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1.6 மில்லியனைத் தாண்டிவிட்டது. பெண்களின் கருவள விகிதமும் 1.14 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய கடுமையான மக்கள்தொகைச் சவால்களுக்கு மத்தியில், தோக்கியோ அரசின் திருமணச் செயலி முயற்சி புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

