காபூல்: ஆப்கானிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களை ஆலங்கட்டி மழை, கனமழை, திடீர் வெள்ளம் வாட்டி வதைத்ததை அடுத்து, 29 பேர் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) தெரிவித்தனர்.
ஃபாரா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை, திடீர் வெள்ளம் காரணமாக 21 பேர் மாண்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் அந்த மாநிலத்தின் பேரிடர் நிர்வாகத்துறையின் தலைவர் திரு முகம்மது இஸ்ராயில் சயார் தெரிவித்தார்.
மாண்ட அனைவரும் அப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
அவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கந்தஹாரின் தெற்குப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
துணி துவைத்துக்கொண்டிருந்த நான்கு பெண்களை வெள்ளம் அடித்துச் சென்றதாகவும் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கந்தஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மூன்று சிறுவர்களும் மாண்டனர்.
அதே நகரில் சிறுவர் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.