பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சியாம் பேரகான் கடைத் தொகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறுவனுக்குத் துப்பாக்கியை விற்பனை செய்த நால்வரைத் தாய்லாந்து காவல்துறை வியாழக்கிழமை கைது செய்தது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அந்த 14 வயது சிறுவன்மீது திட்டமிட்டு கொலை செய்தல், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் தாய்லாந்துக்குச் சுற்றுலா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றுத்தோட்டக்களைச் சுடும் துப்பாக்கியை, உண்மை தோட்டாக்களைப் பயன்படுத்தி சுடும் வகையில் சந்தேக நபர்கள் மாற்றியமைத்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
சிறுவனுக்குத் துப்பாக்கியை விற்பனை செய்ததாக இருவரை சந்தேகத்தின் பேரில் தாய்லாந்தின் தெற்குப் பகுதியான யாலா மாநிலக் காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
இந்த வழக்குக்குத் தொடர்புடைய கூடுதல் ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக காவல்துறை அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டதாக யாலா மாநில மூத்த காவல் அதிகாரி ஒருவர் ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.
“அவர்கள் விசாரணைக்காக பேங்காக்கிற்கு அனுப்பப்பட்டனர்,” எனவும் அவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.
மற்ற இருவர் பேங்காக்கில் வசிப்பதாகவும் அவர்கள் காவல்துறை விசாரணையில் உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சந்தேக நபரில் ஒருவர் துப்பாக்கியை மாற்றியமைத்ததாகவும், மற்றொருவர் அதை விற்பனை செய்ததாகவும், மூன்றாவது நபர் துப்பாக்கியை விற்றது மூலம் கிடைத்த பணத்தைத் தானியங்கி வங்கி இயந்திரத்திலிருந்து எடுத்ததாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், போதைப்பொருள்கள், துப்பாக்கியை மாற்றியமைக்கும் கருவிகள், நேரடி ஒளிபரப்புக்குத் தேவைப்படும் கருவிகள் போன்றவை சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தத் துப்பாக்கி விற்பனை இணையத்தில் நடந்ததாக காவல்துறை சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.