தென்கொரியாவின் காங்வோன் மாநிலத்தில் உள்ள சியோர்வான் பகுதியில், ராணுவத்தின் பீரங்கி வாகனம் ஒன்றின்மீது இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
அத்துடன், மற்றொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவத்திற்கு தென்கொரிய ராணுவம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
“உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்,” என்று புதன்கிழமை (நவம்பர் 11)வெளியிடப்பட்ட ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“விபத்துக்கான சரியான சூழ்நிலைகள், காரணங்கள் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர், மேலும் இந்த விசாரணைக்கு ராணுவம் முழுமையாக ஒத்துழைக்கும்,”
நவம்பர் 5ஆம் தேதி இரவு 7 மணியளவில் சியோர்வான் பகுதியின் சியோங்யாங்ரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேர்ந்தது. கியா ஸ்போர்ட்டேஜ, போர்ஷே ஆகிய இரண்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக ‘கே55ஏ1’ பீரங்கி வாகனத்தின் பின்பக்கத்தில் மோதின.
இந்த விபத்தை ஒளிப்பதிவு செய்த கண்காணிப்புக் கேமராவின் காணொளி, போக்குவரத்து வழக்கறிஞரான ஹான் மூன்-சுல் நடத்தும் யூடியூப் ஒளிவழியான ஹான் மூன்-சுல் டிவியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சாலை மிகவும் இருட்டாக இருந்ததையும், இதனால் பீரங்கி வாகனத்தைப் பார்ப்பது கடினமாக இருந்ததையும் இந்தக் காணொளி காட்டுகிறது.
