பெய்ஜிங்கில் பெய்த கனமழையில் 30 பேர் உயிரிழப்பு

1 mins read
80,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
795dda9e-9908-45d3-9488-ec057f138225
பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் ஜூலை 28ஆம் தேதி கனமழை பெய்ததை அடுத்து குடியிருப்பு வட்டாரங்களில் மழை நீர் தேங்கிக் காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை நள்ளிரவு நிலவரப்படி 80,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மாண்டவர்கள் பெய்ஜிங்கின் வடபகுதியில் மலைகள் நிறைந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 28 பேர் மியூன் வட்டாரத்தையும் இருவர் யான்சிங் வட்டாரத்தையும் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

பெய்ஜிங்கிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கடந்த வாரயிறுதியில் தொடங்கிய கனமழை திங்கட்கிழமை மிகவும் வலுத்தது. பெய்ஜிங்கின் வடக்கு மாவட்டங்களில் 543.3 மில்லிமீட்டர் மழை பதிவானதாக சின்ஹுவா தெரிவித்தது.

திங்கட்கிழமை பின்னேரம், தேடல், மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி சீன அதிபர் ஸி ஜின்பிங் உத்தரவிட்டார்.

பெய்ஜிங்கில் மழை, வெள்ளம் தொடர்பான ஆக உயரிய விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சீனாகனமழைஉயிரிழப்புஅதிபர்