சுபாங்: சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வசதி குறைந்த குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அவர்களுக்கு மொத்தம் 300 உணவுப் பொருள்கள் அடங்கிய கூடைகள் விநியோகிக்கப்பட்டன.
குறிப்பிட்ட பிரிவினர் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்பதை உறுதி செய்வதற்கான இந்த முயற்சியில் பண உதவி மற்றும் அன்றாடத் தேவைகளும் அடங்கும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ரமணன் கூறினார்.
பொருளியல் சவால்கள் உள்ளபோதிலும் நாடு அமைதியாக இருப்பதால், மலேசியர்கள் நன்றியுணர்வுடன் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடி வருவதாகவும் அவர் கூறினார்.
“நாடு தொடர்ந்து அமைதியை அனுபவித்து வரும் நிலையில், இந்தத் தமிழ் புத்தாண்டை நாங்கள் மிகுந்த நன்றியுணர்வுடன் கொண்டாடுகிறோம். பொருளியல் நெருக்கடி தொடர்பான சவால்கள் இருந்தாலும், தேவையுள்ளவர்களுடன் இணைந்து கொண்டாட முடிந்ததற்கு நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 19) சுபாங்கில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு மடானி 2026 கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு, அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசிய மனிதவள அமைச்சருமான திரு ரமணன், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் சமூக நல உதவித் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், அப்பகுதியில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதிலும் தமது அமைச்சு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மலேசிய இந்தியச் சமூக மாற்றத்திற்கான பிரிவு (மித்ரா) குறித்துப் பேசிய அவர், கோயில்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி விநியோகம் அடுத்த வாரம் தொடங்கும் என்று கூறினார்.
“முதல் கட்டமாக, 300 கோயில்களுக்கு உதவி வழங்கப்படும். அதே நேரத்தில் இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக 300க்கும் மேற்பட்ட கோயில்கள் பயன்பெறும். மொத்தத்தில், 600க்கும் மேற்பட்ட கோயில்கள் இந்த முயற்சியால் பயனடையும்,” என்று அமைச்சர் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மித்ரா பல்வேறு புதிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அவை வரும் காலங்களில் படிப்படியாக அறிவிக்கப்படும் என்றும் திரு ரமணன் கூறினார்.
இந்த ஆண்டு மித்ராவின் முக்கிய நோக்கம், 2026 பட்ஜெட்டின் கீழ் ஒதுக்கீடுகள் மூலம் இந்தியச் சமூகத்தினருக்கான கல்வித் திட்டத்தை வலுப்படுத்துவதும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும் ஆகும் என்று அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

